கூடலுார்:கூடலுார் பொன்னுார் பகுதியில் சுற்றுலா தலம் அமைக்க, 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், பணிகள் துவங்கப்படாததால் உள்ளூர் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலுாரில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், பொன்னுார் தோட்டகலை துறை பண்ணையில், சுற்றுலா தலம் அமைக்க, கடந்த ஆண்டு சுற்றுலா துறை மானிய கோரிக்கையின் போது, 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.தொடர்ந்து, பொன்னுார் பண்ணை, 'ஹில்டாப்' மலை பகுதியில், சுற்றுலா தலம் அமைப்பது குறித்து, தோட்டக்கலைத் துறை சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.தமிழக சுற்றுலாத்துறை செயலாளர் மணிவாசன், அப்பகுதிகளை ஆய்வு செய்த பின், 'இங்குள்ள இயற்கை மற்றும் அதனை சார்ந்த வனவிலங்குகளுக்கு பாதுகாப்புக்கு இடையூறின்றி சுற்றுலா மேம்படுத்த வேண்டி உள்ளது. இதில், வனவிலங்கு பாதுகாப்பும் கருத்தில் கொள்ளப்படும்,'என, கூறினார்.இந்நிலையில், 'சுற்றுலா பயணிகளை கவர்ந்து வந்த 'ஹில்டாப்' மலை, தங்களுக்கு சொந்தமானது: அத்துமீறி உள்ளே நுழைபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,' என, வனத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைத்து, கண்காணித்து வருகின்றனர். சுற்றுலா துறை அதிகாரிகள் கூறுகையில், 'வனத்துறை அனுமதி கிடைக்காததால், சுற்றுலா தல பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,' என்றனர். மக்கள் கூறுகையில், 'அரசு துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததால், நிதி ஒதுக்கியும் பணிகள் துவங்கப்படவில்லை. பிரச்னை குறித்து ஆராய்ந்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.