| ADDED : மார் 13, 2024 10:07 PM
கூடலுார் : கூடலுார் அருகே புலி நடமாட்டம் உள்ள தனியார் காபி தோட்டத்தில், வனத்துறையினர் தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.கூடலுார் ஓவேலி வன சோதனை சாவடி அருகே உள்ள, காபி தோட்டத்தில் குறுமிளகு திருட்டை தடுக்க சென்சார் வசதியுடன் கூடிய கேமராக்கள் வைத்து கண்காணித்துவருகின்றனர்.சில தினங்களுக்கு முன், அந்த கேமராவில் மூன்று குட்டிகளுடன் புலி கடந்து சென்ற 'வீடியோ' பதிவாகி இருந்தது. இது தொடர்பான வீடியோ, நேற்று முன்தினம், சமூக வலைத்தளங்கள் வெளியாகி வைரலானது.வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க, அப்பகுதியில் வனத்துறை சார்பில் இரண்டு தானியங்கி கேமராக்கள் வைக்கப்பட்டது.நேற்று, கேமராக்களை ஆய்வு செய்தபோது, புலி படங்கள் எதுவும் பதிவாகவில்லை.எனினும், தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'புலி நடமாட்டம் குறித்து கிடைத்த தகவலை தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகிறோம். இப்பகுதி மக்களுக்கு பாதிப்பு இல்லை,' என்றனர்.