| ADDED : ஜன 20, 2024 01:31 AM
குன்னுார்;குன்னுார் அருகே உபதலை அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் இயற்கை உரங்கள் பயன்படுத்தி கீரை வகைகள் மற்றும் மலை காய்கறிகள் பயிரிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.பள்ளியின் பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவகுரு தலைமையில் முள்ளங்கி மற்றும் மல்லி, பாலக்கீரை உட்பட கீரை வகைகள் பயிரிடப்பட்டுள்ளன. குறிப்பாக பஞ்சகவ்யம் உள்ளிட்ட இயற்கை உரங்களை பயன்படுத்தி மேற்கொண்ட விவசாயத்தில் முள்ளங்கி நேற்று அறுவடை செய்யப்பட்டது.அதில், பள்ளி தலைமையாசிரியர் ஐரின் ரெஜி, கல்வி அலுவலக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை சேர்ந்த தமிழக முதல்வரின் பசுமை தோழன் அலுவலர் ஸ்வாதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகள் கூறுகையில்,'பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழல் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கையை எடுக்கப்பட்டு வரும் நிலையில் ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்துகள் இல்லாமல், மண்புழு உரம்.பஞ்சகவ்யம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இவற்றை பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்காக வழங்கி வருகின்றனர். விற்பனையும் செய்து அந்த தொகையில் அடுத்த விவசாய சாகுபடிக்கு தயார் செய்ய முடிவு செய்துள்ளனர். சுமார், 1000 சதுர அடி அளவிற்கு இயற்கை விவசாயம் மேற்கொண்டுள்ளனர்,' என்றனர்.