| ADDED : ஜன 16, 2024 11:18 PM
பந்தலுார்;கூடலுார் அருகே பஸ்சில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலியான பகுதியை போக்குவரத்து அதிகாரிகள்; போலீசார் நேரில் ஆய்வு செய்தனர்.கூடலுாரில் இருந்து நேற்று முன்தினம் மாலை, அய்யங்கொல்லி பகுதிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சை டிரைவர் நாகராஜ்,50, ஓட்டி சென்றார். பஸ் மழவன் சேரம்பாடி என்ற இடத்தில் சென்ற போது, எதிரே வந்த வாகனத்திற்கு இடம் கொடுக்க பஸ்சை சாலை ஓரத்தில் இறக்கியுள்ளார்.சாலையின் ஓரப்பகுதி உயரம் கூடுதலாக இருந்ததால், பஸ் ஒரு பக்கமாக சரிந்து சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியது. அதில், மின்கம்பத்தின் மேல் பக்கம் கம்பியுடன் கூடிய பீங்கான் உடைந்து பஸ்சின் மீது விழுந்து மின்சாரம் பாய்ந்தது.அதில், பஸ்சிலிருந்து முன்பக்க வழியாக இறங்கிய டிரைவர் நாகராஜ்; புஞ்சை கொல்லி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாலாஜி,51, ஆகியோர் உயிர் இழந்தனர். இதை தொடர்ந்து, தேவாலா டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையிலான போலீசார், அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஜோசப், பொது மேலாளர் நடராஜ், கிளை மேலாளர் அருள் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அவர்கள் கூறுகையில்,'விபத்து நடந்த இப்பகுதியில், சாலையின் ஒரு பகுதியின் உயரமான பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தெரிவித்தனர். அதன்பின், உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இருவரின் உடல்களுக்கும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அரசு பஸ் பந்தலுார் சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது.