| ADDED : மார் 05, 2024 09:04 PM
ஊட்டி:தனது இரு மகன்களை ராணுவ பணிக்கு அனுப்பிய பெற்றோர், ஊட்டியில் நடந்த மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் கவுரவிக்கப்பட்டனர். ஒவ்வொரு வாரமும், திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் குறித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக, துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.ஊட்டியில் நடந்த கூட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், தனது இரு மகன்களை ராணுவ பணிக்கு அனுப்பிய பெற்றோர் கவுரிவிக்கப்பட்டனர்.அதன்படி, மாநில அரசால் வழங்கப்படும், 12 கிராம் எடையுள்ள வெள்ளி பதக்கம், படை வீரர்களின் தாயார் லட்சுமிக்கு வழங்கி கலெக்டர் பாராட்டினார்.முன்னாள் படை வீரர் ரவி என்பவருக்கு, முன்னாள் படைவீரர் நலத்துறை நிதியில் இருந்து, ஒரு லட்சம் ரூபாய் மானிய தொகையை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து, தனியார் தேயிலை தொழிற்சாலை சங்கம் சார்பாக, மாணவர்களின் போட்டி தேர்வுக்கு பயிற்சிகளை மேம்படுத்தும் வகையில், ஊட்டி அறிவு சார் மையத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்கினார். மொத்தம், 195 மனுக்கள் பெற்றப்பட்டது.தனித்துணை ஆட்சியர் கல்பனா, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், முன்னாள் படைவீரர் இயக்குனர் இந்திரகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.