| ADDED : ஜூலை 12, 2024 04:20 AM
திருவாடானை: வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இணையதளத்தில் விண்ணப்பம் செய்வதில் விவசாயிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண், கிராவல் மண் போன்ற சிறு கனிமங்களை துார்வாரி எடுத்து விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. மாவட்ட அரசிதழில் பட்டியல் வெளியிட்டு இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. திருவாடானை தாலுகாவில் ஏராளமானோர் விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:இத்திட்டத்தை எளிமைப்படுத்துவற்காக முதல்வர் அறிவித்த நிலையில் இ-சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அரசு இணையதளத்தில் சிட்டா பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வி.ஏ.ஓ., விடம் உரிமைச் சான்று வாங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வருவாய்த்துறை ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டால் வி.ஏ.ஓ., அந்த ஆவணம் அடிப்படையில் சான்று வழங்குகிறார். இச்சான்றை வாங்கி இணையதளத்தில் பதிவு செய்ய முடியவில்லை. போதுமான விளக்கம் இல்லாததால் குழப்பமாக உள்ளது.இத்திட்டம் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன் பருவமழை துவங்கி வீணாகும் நிலை உள்ளது. ஆகவே இணையதளத்தில் விண்ணப்பிக்க சரியான தகவலை வெளியிட வேண்டும் என்றனர்.