| ADDED : மே 20, 2024 11:03 PM
பரமக்குடி : பரமக்குடியில் அனைத்து தெருக்களிலும் கட்டுக்கடங்காத ஆக்கிரமிப்புகளால் இடியாப்ப சிக்கலில் மக்கள் தவிக்கின்றனர்.பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இங்கு ஒவ்வொரு வார்டிலும் 10க்கும் மேற்பட்ட தெருக்கள் மற்றும் குறுகிய சந்துகள் உள்ளது. நகர் பகுதி குறுகிய இடத்தில் உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்விடங்களை அதற்குள்ளாகவே அமைத்துள்ளனர். இந்நிலையில் பழைய வீடுகள் இடிக்கப்படும் நிலையில், ஒவ்வொரு இடத்திலும் மாடி வீடுகள் கட்டப்பட்டு மக்கள் தங்கும் படி உள்ளது. அப்போது வீடுகள் மற்றும் கடைகளை கட்டுவோர் தங்களுக்கான இடங்கள் வரை அஸ்திவாரத்தை அமைகின்றனர். தெருக்களில் படிகளை அமைப்பது, வாகன நிறுத்தங்களை ஏற்படுத்துவது என செய்யக்கூடாத செயல்களை செய்கின்றனர்.தெரு ஓரங்களில் உள்ள மின் கம்பங்களை மையமாக வைத்து ஆக்கிரமிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. இதனால் பஸ் ஸ்டாண்டிலிருந்து செல்லும் கீழப்பள்ளி வாசல் தெரு, ஆர்ச், பெரிய பஜார், உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட் மற்றும் உள்ள பரமக்குடி, எமனேஸ்வரம் என ஒவ்வொரு குறுக்கு தெருக்களிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனால் ஆட்டோ, ஆம்புலன்ஸ் மற்றும் அவசர தேவைக்கு தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களும் அவசர கால நிலையை உணர்வதுடன், அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.