| ADDED : மார் 28, 2024 10:54 PM
வாலிநோக்கம் : வாலிநோக்கம் மன்னார் வளைகுடா வனச்சரக கடற்கரையோரங்களில் கடந்த பல ஆண்டுகளாக ஆமைகள் முட்டையிட்டு வருகின்றன. நடப்பாண்டில் ஆமை முட்டைகள் பொரிப்பகம் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் வாலிநோக்கம் பம்பு ஹவுஸ், சீலா மீன்பாடு, ஆதம்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டது.ஆபத்தான உயிரினங்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கடற்கரையோர மணல் பரப்பில் குழி தோண்டி 100 முதல் 150 முட்டைகளை ஒரு ஆமை இடுகிறது. தற்போது 2000 த்திற்கும் அதிகமான முட்டைகள் ஆமைக்குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து வனத்துறை சார்பில் பாதுகாக்கப்படுகின்றன.அதன் பின் 45 முதல் 50 நாட்களுக்குள் குஞ்சுகள் பொரிப்பகத்தில் இருந்து இருந்து வெளியே வரும். இந்த ஆமைக்குஞ்சுகளை முறையாக சேகரித்து அவற்றை கடலில் விடும் பணி நடந்தது.கீழக்கரை மன்னார் வளைகுடா வனச்சரக அலுவலர் செந்தில்குமார், வனவர் கனகராஜ், வேட்டை தடுப்பு காவலர்கள், பள்ளி மாணவர்கள் இப்பணியில் பங்கேற்றனர். சீறிப்பாயும் அலைகளுக்கு மத்தியில் ஆலிவர் ட்ரீ இன ஆமைக்குஞ்சுகள் பாதுகாப்பான முறையில் கடலுக்குள் சென்றன.