| ADDED : டிச 12, 2025 04:20 AM
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிளாட் அப்ரூவல் வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி ஒன்றிய அலுவலக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் கைது செய்யப்பட்டார். பரமக்குடி தாலுகா எஸ்.அண்டக்குடி ஊராட்சியில் ஒருவர் இடம் வாங்கியுள்ளார். இவர் ராமநாதபுரம் நகர் ஊரமைப்பு துறையில் மனையிட அனுமதி பெற உள்ளாட்சி மனை கட்டணமாக அரசுக்கு 3 லட்சத்து 47 ஆயிரத்து 800 ரூபாய் கடந்த மாதம் செலுத்தியுள்ளார். இடத்திற்கான உள்ளாட்சி அனுமதி பெற பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக பி.டி.ஓ., அன்புகண்ணனை சந்தித்தார். அவர் இது தொடர்பாக துணை பி.டி.ஓ.,(கி.ஊ.,) இளங்கோவனை 49, பார்க்க கூறியுள்ளார். அப்போது ஒரு வாரம் கழித்து வருமாறு கூறிய இளங்கோவன், பிளாட் அப்ரூவல் பைல் ரெடியாக தனக்கும், அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும் சேர்த்து ரூ.1 லட்சம் வழங்கினால் தான் பி.டி.ஓ.,விடமிருந்து கையெழுத்து பெற்றுத் தர முடியும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து நேற்று காலை பெயர் கூற விரும்பாத மனுதாரர் மீண்டும் இளங்கோவனை சந்தித்த போது தற்போது ரூ.50 ஆயிரமும், வெள்ளிக்கிழமை மீதி பணம் 50 ஆயிரம் ரூபாய் தருமாறு கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாதவர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரம் பணத்தை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவனிடம் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர். பரமக்குடியில் இரண்டு நாட்களுக்கு முன்பு பட்டா வழங்க ரூ.13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்து லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் கைது செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.