| ADDED : ஜன 20, 2024 04:37 AM
கடலாடி: -கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 60 கிராம ஊராட்சிகளில் முறையான விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட விவரங்கள் பற்றி தெரிவிக்காத நிலையில் கடலாடி வேளாண் துறை அதிகாரிகள் இருந்து வருகின்றனர்.கடந்த நவ., டிச., மாதங்களில் பெய்த கன மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் 90 சதவீதம் விவசாய நிலங்கள் பாதிப்பை சந்தித்தன. நெல், மிளகாய், மல்லி, உளுந்து, கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள் மண் அரிப்பால் சேதமடைந்தது.இந்நிலையில் மீண்டும் விவசாயத்திற்காக விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவு செய்து கடன் வாங்கி உழவுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும் சேதத்தை சந்தித்த விவசாயிகளுக்கு உரிய முறையில் நிவாரணத் தொகை கிடைக்காத நிலை உள்ளது.கடலாடி சுற்றுவட்டார கிராம விவசாயிகள் கூறியதாவது:அதிக மழை வெள்ள சேதத்தால் பாதிப்பை சந்தித்துள்ளோம். விவசாயிகளுக்கு தேவையான இழப்பீட்டையும், சந்தித்த இடர்பாடுகளுக்கு உரிய நேரத்தில் உதவிகளையும் வேளாண் துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து அரசுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசின் திட்டங்களை பெயரளவில் செயல்படுத்தாமல் அலுவலகக் கூட்டங்கள் உள்ளிட்டவைகளில் காட்சிப்படுத்தாமல் முறையாக விவசாயிகளுக்கு சென்றடைய நீண்ட கால திட்டங்களை செய்து விவசாயத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்றனர்.