உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உணவகங்களுக்கு எச்சரிக்கை: அச்சுப்பதிந்த காகிதத்தை பயன்படுத்தக் கூடாது: மீறினால்  உணவுப் பாதுகாப்புதுறை நடவடிக்கை

உணவகங்களுக்கு எச்சரிக்கை: அச்சுப்பதிந்த காகிதத்தை பயன்படுத்தக் கூடாது: மீறினால்  உணவுப் பாதுகாப்புதுறை நடவடிக்கை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான சிறிய ஓட்டல்களில் எண்ணெய் பலகாரங்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை பயன்படுத்த அச்சுப்பதிந்த காகிதங்களை பயன்படுத்துகின்றனர். செய்தித்தாள், நோட்டீஸ் உள்ளிட்ட மை அச்சிடப்பட்ட காகிதங்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் கூறியதாவது: அச்சிடப்பட்ட காகித மையில் உள்ள வேதிபொருட்களான அரைசல் அமீன்கள் நுரையீரல் மற்றும் சிறுநீர் பை கேன்சரை உருவாக்கும். வண்ணங்கள், தடிமான எழுத்துக்களை விரைவாக உலர்த்த பெட்ரோலிய மினரல் ஆயில், மெத்தனால், பென்ஸீன், கோபால்ட் போன்ற வேதிப்பொருட்கள் அச்சு பதிக்க பயன்படுத்தப்படுகிறது.இதனால் சுத்தமான சுகாதாரமான முறையில் உணவை தயாரித்தாலும் அச்சிடப்பட்ட காகிதத்தில் வைக்கப்பட்டவுடன் தரமற்ற உணவாகிறது. வயதானவர்கள், குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் நோய் எதிர்ப்பு சக்தி இழந்து கேன்சர் போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தால் செய்தித் தாள், நோட்டீஸ்கள் போன்ற அச்சுப் பதிந்த எந்த காகிதத்திலும் உணவை பேக்கிங் செய்யவோ, எண்ணெய் பிழியவோ, உண்ணவோ பயன்படுத்த தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. எனவே டீக்கடைகள், உணவகங்கள், சிற்றுண்டி விடுதிகள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருள் விற்பனை நிறுவனங்களில் பேக்கிங்கிற்கு அச்சுப் பதிந்த காகிதங்களை பயன்படுத்தக் கூடாது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் உணவு பொருட்களை இலையில் வைத்து பார்சல் செய்ய வலியுறுத்த வேண்டும். தடையை மீறும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை