ஓமலுார்:சேலம்
லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் விக்னேஷ், காடையாம்பட்டி
தாலுகா கிழக்கு ஒன்றியம், ஓமலுார் தெற்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளில்
நேற்று, திறந்த வெளி வேனில் பிரசாரத்தை தொடங்கினார்.
தீவட்டிப்பட்டியில் தொடங்கிய பிரசாரத்தில் மக்கள் ஆரத்தி எடுத்தும்,
மேள தாளம் முழங்கவும் வரவேற்பு அளித்தனர். செல்லும் வழியில் சாலை
இருபுறமும் கட்சி நிர்வாகிகள், மக்கள் நின்று வரவேற்றனர்.வேட்பாளர் விக்னேஷூக்கு ஆதரவாக, ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டு பேசியதாவது:அ.தி.மு.க.,
ஆட்சியில் காடையாம்பட்டி புது தாலுகாவாக உதயமானது. தொடர்ந்து
தீயணைப்பு நிலையம் கொண்டுவரப்பட்டது. ஒன்றியம், நகர பகுதிகளில்
மேட்டூர் குடிநீர் வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தெரு
விளக்கு, சாலை, குடிநீர் தொட்டிகள், ஆழ்துளை கிணறு அமைத்தல்,
குடிமராமத்து பணி என, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை
மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.எதிர்காலத்தில்
காடையாம்பட்டிக்கு தலைமை மருத்துவமனை, சப் - ரிஜிஸ்டர் அலுவலகம்,
மேட்டூர் குடிநீர் வழங்கும் பணியை மேலும் விரிவாக்கம் செய்வது, கூடுதல்
பஸ் போக்குவரத்து, விவசாயிகளுக்கு தேவையான வளர்ச்சி
திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். அதனால் நம் வேட்பாளர்
விக்னேஷூக்கு, இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய
வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து விக்னேஷ் பேசுகையில்,
''உங்கள் கோரிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி நிறைவேற்ற
உழைப்பேன். உங்களுக்கு சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு வழங்குங்கள்.
காடையாம்பட்டி தாலுகா முழுதும் விவசாயம் சார்ந்த பகுதி. அதனால்
விவசாயிகளின் காப்பாளனாக பணியாற்ற, இரட்டை இலை சின்னத்தில்
ஓட்டளித்து வெற்றி பெறச் செய்யுங்கள்,'' என்றார்.முன்னாள்
எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணன், வெற்றிவேல், ஒன்றிய செயலர்கள்
சித்தேஸ்வரன், சுப்ரமணியம், கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி
நிர்வாகிகள் பங்கேற்றனர்.