| ADDED : ஆக 05, 2024 11:48 PM
மேட்டூர்:மேட்டூர் அணை, 16 கண் மதகில் வெளியேற்றும் உபரி நீரால் தீவு உருவாகியுள்ளது. அதில் சிக்கியுள்ள ஏழு நாய்களுக்கு நேற்று டிரோன் மூலம் பிரியாணி, பிஸ்கட் அனுப்பி வைக்கப்பட்டது.மேட்டூர் அணை நிரம்பியதால் கடந்த, 30ல், 16 கண் மதகில் அபாய எச்சரிக்கை விடுத்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. அப்போது வெள்ள நீருக்கு இடையே தீவாக மாறிய கரடு பகுதியில், ஏழு நாய்கள் சிக்கி கொண்டன. அந்த நாய்களால் வெள்ளத்தில் நீந்தி கரைக்கு வர முடியவில்லை. எனவே, மேட்டூர் தீயணைப்பு மீட்பு குழு மூலம் நாய்களுக்கு டிரோன் மூலம் உணவு எடுத்து சென்று கடந்த ஐந்து நாட்களாக வழங்கப்பட்டது.தீவில் சிக்கிய நாய்களை காப்பாற்ற வேண்டும் என, ' ஹெவன் பார் அனிமல்ஸ்' அறக்கட்டளை சார்பில், அதன் நிர்வாகி பிரகாஷ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.நாய்களை பாதுகாக்க, உணவு அனுப்பி வைப்பதாக அரசு தரப்பில் கூறியதை தொடர்ந்து வழக்கை நீதிபதி இன்று (ஆக.,6) ஒத்தி வைத்தார். வழக்கம் போல தீயணைப்பு மீட்பு குழு சார்பில் தீவில் தவித்த நாய்களுக்கு டிரோன் மூலம் பிரியாணி, பிஸ்கட் உணவாக வழங்கப்பட்டது. அதனை தீயணைப்பு, மீட்பு குழு சேலம் மண்டல துணை இயக்குனர் கல்யாணகுமார் நேரில் ஆய்வு செய்தார்.நாய்களை மீட்க தீயணைப்பு குழுவினர், ஆற்றில் இறங்கிய நிலையில் தீவுக்கு இடைப்பட்ட பகுதியில் நீர்வரத்து கூடுதலாக இருந்ததால் மீட்பு குழுவினர் திரும்பினர். இந்நிலையில், நாய்கள் தொடர்பான வழக்கு, இன்று (ஆக.,6) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்து, 16 கண் மதகில் உபரி நீர் திறப்பும் குறைக்க வாய்ப்புள்ளது. வெள்ளப்பெருக்கு குறையும் என்பதால், தீவில் சிக்கியுள்ள நாய்கள் நீரில் நீந்தி கரைக்கு வரக்கூடும் என, அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.