| ADDED : ஜன 03, 2024 11:25 AM
வாழப்பாடி: வாழப்பாடி அருகே, புதுமண தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறில், மனமுடைந்த மனைவி கிணற்றில் குதித்ததையடுத்து, கணவரும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த துக்கியம்பாளையம் அருகே மாரியம்மன் புதுாரை சேர்ந்த கதிர்வேல் மகன் அருள் முருகன், 25, கொத்தனார். இவருக்கும், சந்திரபிள்ளைவலசு அருகே சமத்துவபுரம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் மகள் அபிராமி, 19, என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன் திருமணமானது.இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:30 மணியளவில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த அபிராமி, தற்கொலை செய்து கொள்ள அருகில் இருந்த, மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குதித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் அருள் முருகன் பாய்ந்து சென்று, மனைவியை காப்பாற்ற கிணற்றில் குதித்துள்ளார். இதில் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். வாழப்பாடி போலீசார், தீயணைப்பு துறை வீரர்கள் இருவரது உடலையும் மீட்டனர்.அபிராமி தாய் மாயா அளித்த புகார்படி வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர். தற்கொலை செய்து கொண்ட தம்பதிக்கு திருமணமாகி இரு மாதங்களே ஆனதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.