| ADDED : மார் 18, 2024 03:21 AM
வீரபாண்டி: லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையிலும் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் எதிரே, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலை மறைக்கப்படாமல் உள்ளது.ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் அகற்றப்படாமல் அதன் சின்னத்துடன் கூடிய கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தேர்தல் நடத்தை விதிகளை அமலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல் தாரமங்கலத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி முன்னாள் முதல்வர்கள் சிலை நேற்று மூடப்படாமல் இருந்தன. குறிப்பாக பஸ் ஸ்டாண்டில் எம்.ஜி.ஆர்., சிலை, வாரச்சந்தை பகுதியில் அண்ணாதுரை, தேர் நிலையம் பகுதியில் கருணாநிதி, தினசரி மார்கெட், போஸ்ட ஆபீஸ் அருகே காமராஜர் சிலைகள் மறைக்கப்படாமல் உள்ளன.பா.ஜ., எதிர்ப்புஆத்துார், நரசிங்கபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை, தேர்தல் அலுவலர்கள் அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது ஆத்துார், காமராஜர் சிலை அருகே, பா.ஜ., கொடி கம்பங்களை அகற்றுவதற்கு அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதம் செய்தனர். பின் போலீஸ் பாதுகாப்புடன் கொடிக்கம்பம் அகற்றி, சின்னங்கள் மீது துணிகள் போட்டு மறைத்தனர்.அதேபோல் அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மீதும் துணிகளை போட்டு மறைத்தனர்.