பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட எலந்தகுட்டை பஞ்., ஈகாட்டூர் பகுதி முழுதும் விவசாயம் நிறைந்த பகுதியாகும். இதனால், இப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, விசாயிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கிராம சபை கூட்டத்தில் மனு கொடுத்தனர். இதையடுத்து, ஈகாட்டூர் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த விவசாயி கனகராஜ் கூறியதாவது:ஈகாட்டூர் பகுதியில் ஏராளமான விவசாய நிலம் உள்ளது. மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் செல்கிறது. இப்பகுதியில், 2,500க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். 150 கிணறுகள் உள்ளன. ஏராளமான போர்வெல்கள் உள்ளன. இப்பகுதி மக்கள், விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.இப்பகுதியில், பள்ளிப்பாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குப்பை எரிக்கும் கூடம் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த திட்டம் இப்பகுதிக்கு வந்தால் விவசாயம் பாதிக்கப்படும், மக்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படும். நிலத்தடி நீர் பாதிக்கும். இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த திட்டத்தை நகராட்சி நிர்வாகம் கைவிடவேண்டும் என்றும், நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் மனு கொடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, எலந்தகுட்டை பஞ்., தலைவர் வெங்கடாஜலம் கூறுகையில், ''ஈகாட்டூர் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குப்பை எரிக்கும் திட்டம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். அதனை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்படும்,'' என்றார்.