உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 15 நாளில் மனுக்களுக்கு தீர்வு; ஜமாபந்தி அலுவலர் அறிவுரை

15 நாளில் மனுக்களுக்கு தீர்வு; ஜமாபந்தி அலுவலர் அறிவுரை

காடையாம்பட்டி: காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில், இரு நாட்களாக ஜமாபந்தி நடந்தது. நேற்று முன்தினம் காடையாம்பட்டி கிழக்கு, மேற்கு ஆகிய உள்வட்டங்களுக்கும், நேற்று செம்மாண்டப்பட்டி உள்வட்ட கிரமாங்களுக்கும் நடந்தது. ஜமாபந்தி அலுவலராக, சேலம் முத்திரைத்தாள் கட்டணம் தனித்துணை கலெக்டர் ரவிச்சந்திரன் செயல்பட்டார். நேற்று, 103 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து கிராம கணக்கு பதிவேடு ஆய்வு செய்யப்பட்டது. நேற்றுடன் ஜமாபந்தி நிறைவு பெற்றது. தனி பட்டா, முதல் பட்டதாரி உள்பட, 9 பயனாளிகளுக்கு உடனே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.பின் கூட்டத்தில் ரவிச்சந்திரன் பேசுகையில், ''இரு நாட்களாக மக்களிடம் பெறப்பட்ட தகுதியான மனுக்கள் மீது, 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்,'' என்றார்.காடையாம்பட்டி தாசில்தார் ஹசீனாபானு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விமல் பிரகாஷ் உடனிருந்தனர்.ஓமலுார், வாழப்பாடிஅதேபோல் ஓமலுார் தாலுகா அலுவலகத்தில், 2ம் நாளாக நேற்று கருப்பூர் உள்வட்ட கிராமமான வெள்ளாளப்பட்டி, தேக்கம்பட்டி, மூங்கில்பாடி உள்பட, 22 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடந்தது. அதில் மேட்டூர் சப் - கலெக்டர் பொன்மணி, மக்களிடமிருந்து, 297 மனுக்களை பெற்றார். தொடர்ந்து, வி.ஏ.ஓ.,க்களின் கிராம ஆவண பதிவேடுகளை பார்வையிட்டார். ஓமலுார் தாசில்தார் ரவிக்குமார் உடனிருந்தார்.வாழப்பாடி தாலுகாவில், 2ம் நாளாக பேளூர் குறுவட்டத்தில் உள்ள, 7 ஊராட்சிகளுக்கு, அதன் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. சேலம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் லட்சுமியிடம், 76 மனுக்கள் வழங்கப்பட்டன. தாசில்தார் ஜெயந்தி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.மயானத்துக்கு நிலம் ஒதுக்க வலியுறுத்தல்மேட்டூர் வட்டத்தில், கடந்த, 18ல் தொடங்கிய ஜமாபந்தி, 26 வரை நடக்கிறது. நேற்று மேட்டூர் உள்வட்டத்துக்கு உட்பட்ட சாம்பள்ளி, நவப்பட்டி, பி.என்.பட்டி, கோல்நாயக்கன்பட்டி, கோனுார் வருவாய் கிராமங்களுக்கான தீர்வாயம் நடந்தது. அதில் சாம்பள்ளி ஊராட்சி தலைவர் அந்தோணிசாமி தலைமையில் மக்கள், நத்தம் நிலத்தில், 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பதால், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்; கோவில்பாளையம் மக்களுக்கு, மாசிலாபாளையம் மலையடிவாரம், 25 சென்ட் இடம் மயானத்துக்கு ஒதுக்க வேண்டும்; சாம்பள்ளியில், 250 வீடுகளுக்கு நில மதிப்பீட்டு வரி நிர்ணயம் செய்ய வேண்டும் என, தீர்வாய அலுவலர் மாறனிடம் மனு கொடுத்தனர்.'300 குடும்பத்துக்கு பட்டா'மல்லுாரில், டவுன் பஞ்சாயத்து தலைவர் லதா, துணைத்தலைவர் அய்யனார், ஜமாபந்தியில் அளித்த மனு: மல்லுார் டவுன் பஞ்சாயத்தில், 500 குடும்பத்தினர் சொந்த வீடு, நிலம் இல்லாத வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். அதில், 300 குடும்பத்துக்கு, பி.மேட்டூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி, 2023ல் டவுன் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் ஆர்.டி.ஓ., - தாசில்தார், சம்பந்தப்பட்ட நிலத்தை ஆய்வு செய்தனர். ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் பட்டா வழங்க நடவடிக்கை இல்லை. இனியாவது இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ