| ADDED : பிப் 05, 2024 10:29 AM
இடைப்பாடி: வெள்ளரிவெள்ளி கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த முறைகேடால் பாதிக்கப்பட்டோர், மனு கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இடைப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், 1,070 உறுப்பினர்களுக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.அந்த பணத்தை சங்க நிர்வாக குழுவில் இருந்தவர்கள் முறைகேடு செய்தனர். இதனால் பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள், 3 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்நிலையில் வரும், 7 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தனர்.இதையடுத்து கடந்த, 2ல் சேலம் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ரவிக்குமார், பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதன் எதிரொலியாக, இன்று முதல், 5 நாட்களுக்கு, பாதிக்கப்பட்டோர் மனு அளிக்கலாம் என, சங்க பலகையில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.அதன்படி இந்த சங்கத்தில் அரசு தள்ளுபடி செய்த விவசாய, நகை கடன்களின் பணத்தை தராமல் இருந்தால் சங்க அலுவலகத்தில், கூட்டுறவு சார் - பதிவாளரிடம் மனு கொடுக்கலாம், ஊராட்சி வார்டு வாரியாக இன்று முதல் வரும், 8 வரையும், அதில் தவறியவர்கள், 9ல் மனு கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.