| ADDED : ஆக 20, 2024 07:27 AM
நாச்சியாபுரம்: திருப்புத்தூர் அருகே நாச்சியாபுரத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கான சிலைகள் தயாராகிறது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முக்கிய நகரங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்திய பின், ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.இதற்காக ஹிந்து முன்னணி சார்பில் ஆண்டுதோறும் திருப்புத்தூர் பகுதியில் விநாயகர் சிலைகள் உருவாக்கி விற்பனை செய்கின்றனர். இந்த ஆண்டு திருப்புத்தூர் அருகே நாச்சியாபுரத்தில் பழைய மில் கட்டிடத்தில் இந்த 'மெகா' சிலைகள் தயாரிக்கப்படுகிறது. கடலூர், பண்ருட்டி,விழுப்புரத்தில் இருந்து விநாயகர் சிலைகளுக்கான தலை, கால், கை, வாகனம் போன்ற பாகங்கள் தயார் நிலையில் வாங்கப்பட்டுளளன.நாச்சியாபுரத்தில் அவை ஒன்று சேர்க்கப்பட்டு விநாயகர் உருவமாக்கி, தேவையான வாகனங்களை இணைத்து வண்ணப்பூச்சு கொடுத்து முழுமையடைய செய்துள்ளனர்.கடந்த 3 மாதங்களாக 5 பேர் இந்த பணியில் ஈடுப்பட்டுள்ளனர். மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிகளின்படி ரசாயனப் பொருட்களை தவிர்த்து, மைதா, கிழங்கு மாவுகளால் இந்த சிலைகள் தயாரித்துள்ளனர். இங்கு விநாயகர் சிலைகள் 3 முதல் 10 அடி உயரம் வரை தயாரிக்கின்றனர்.வாகனங்களில் விநாயகர், பல்வேறு ஆயுதங்களுடன் காட்சி தருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.15,000 முதல் விற்கப்படுகிறது.ஹிந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் பாலா கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்காக ரசாயனம் கலக்காத சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் விசர்சனம் செய்ய 250 சிலைகள் தயார் நிலையில் உள்ளன. 50 சதவீத சிலைகள் பக்தர்கள் வாங்கி சென்று விட்டனர், என்றார்.