| ADDED : ஜூலை 05, 2024 04:57 AM
சிவகங்கை: சிவகங்கையில் அடிப்படை வசதி இல்லாமல், கட்டடங்கள் இடிந்த நிலையில் கிடக்கும் ரயில்வே ஸ்டேஷனை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.மாவட்ட தலைநகரான சிவகங்கையில் கலெக்டர் அலுவலகம், பிற துறை அலுவலகங்களுக்கு வெளியூர்களில் இருந்து ரயிலில் ஏராளமான அலுவலர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக இங்கிருந்து சென்னைக்கு இரவு நேர ரயில்களில் அலுவலர்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். இச்சிறப்பு பெற்ற சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாத நிலை தான் பயணிகளை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. ரயில்வே ஸ்டேஷனுக்கு அரணாக இருப்பது, காம்பவுண்ட் சுவர் தான். ஆனால், இங்கு சுவர் கட்டாமல் சிமென்ட் தடுப்பு வைத்துள்ளனர். அவையும் சிதிலமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. முதல் பிளாட்பாரத்தில் பயணிகள் அமர கட்டப்பட்ட திண்ணை உடைந்து காணப்படுகிறது. ஸ்டேஷனுக்கு வெளியே பயணிகள் பயன்படுத்துவதற்காக தனியார் பங்களிப்புடன் நவீன கழிப்பறை கட்டினர். அவை தற்போது செயல்பாடின்றி முடங்கி கிடக்கிறது. அதே போன்று பயணிகளின் பயன்பாட்டிற்காக இருந்த இரண்டு வங்கி ஏ.டி.எம்.,களும் செயல்பாடின்றி கிடக்கின்றன. முதல் பிளாட்பாரத்தில் உள்ள பழைய கழிப்பறை கட்டடத்தை அகற்றாமல் அப்படியே விட்டு வைத்துள்ளனர். வயதான பயணிகள் 2 மற்றும் 3 வது பிளாட்பாரம் செல்ல கட்டப்பட்ட 'லிப்ட்' செயல்பாட்டிற்கு வரவில்லை. 2 மற்றும் 3 வது பிளாட்பாரத்தில் சிமென்ட் தரை தளம் அமைக்க கிராவல் மண் கொட்டிய நிலையில் அப்படியே கிடக்கிறது. இரவில் பயணிகளுக்கு போதிய மின்விளக்கு வசதியை பிளாட்பாரங்களில் ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தி தர வில்லை. குறிப்பாக பழைய ரிசர்வேஷன் கவுண்டர், ஸ்டேஷன் மாஸ்டர் அறை இருந்த கட்டடங்கள் அகற்றப்படாமல் குப்பை நிறைந்து காணப்படுகிறது. சிவகங்கை எம்.பி., கார்த்தி, சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.