| ADDED : ஆக 19, 2024 12:36 AM
திருப்புவனம் : வைகை ஆற்றில் வரும் மழை தண்ணீர் பிரமனூர் கால்வாயில் அதிகளவு செல்வதால் இந்தாண்டு முன் கூட்டியே விவசாய பணிகளை தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் செப்டம்பர் மாத கடைசியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். வடகிழக்கு பருவ மழையை நம்பி பருவத்திற்கு நெல் சாகுபடி பணிகள் தொடங்குவர். வைகை ஆற்றின் வலது மற்றும் இடது பிரதான கால்வாய் மூலம் திருப்புவனம் பகுதி விவசாயிகள் பயன் பெறுகின்றனர். வைகை ஆற்றில் தட்டான்குளம் தடுப்பணையில் இருந்து பிரமனூர் கண்மாய்க்கு நீர் வரத்து கால்வாய் உள்ளது. வைகை அணையில் தண்ணீர் திறக்கப்படும் போது பிரமனூர் கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்படும். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக வைகை ஆற்றில் மழை நீர் வந்த வண்ணம் உள்ளது. தட்டான்குளம் தடுப்பணையில் இருந்து மழை நீரை பிரமனூர் கால்வாயில் திறந்து விட்டுள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையை நம்பி செப்., ல் நெல் நாற்றங்கால் அமைப்போம். வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீரை கண்மாய்க்கு கொண்டு சென்ற பின் அனைத்து விவசாயிகளும் நெல் நாற்றங்கால் அமைப்பார்கள். இந்தாண்டு மழை காரணமாக ஆக., மாதமே தண்ணீர் வந்துவிட்டது. பிரமனூர் கண்மாய் பாசனத்தை நம்பி உள்ள விவசாயிகள் தற்போது நெல் நாற்றங்கால் அமைக்கும் பணியை தொடங்க உள்ளனர். இன்னும் பத்து நாட்கள் வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்தால் நீர் வரத்தும் அதிகரிக்கும். இக்கண்மாயை நம்பி சொக்கநாதிருப்பு, வாடி, பிரமனூர் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பலன் பெறுவர்.