| ADDED : மார் 17, 2024 11:47 PM
காரைக்குடி : காரைக்குடியில் உள்ள ஆதார் மையம் மற்றும் போஸ்ட் ஆபீசில், சர்வர் பிரச்னை காரணமாக ஆதார் பெற முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.காரைக்குடி தாலுகா அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. தவிர போஸ்ட் ஆபீஸ், வங்கிகள், தனியார் இ சேவை மையங்கள் மூலம் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.காரைக்குடி மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் தினமும் புதிதாக ஆதார் எடுப்பதற்கும், திருத்தங்கள் செய்வதற்கும் வருகின்றனர்.ஆதார் சேவை மையங்களில், சர்வர் பிரச்னை காரணமாக மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது. கூட்ட நெரிசலை தடுக்க போஸ்ட் ஆபீஸ் உட்பட சில மையங்களில் டோக்கன் முறை கடைபிடிக்கப்படுகிறது. அவ்வாறு டோக்கன் முறையை பின்பற்றும்போது, 2 அல்லது 3 நாட்கள் கழித்து வருமாறு தெரிவிக்கின்றனர். அவசரத்திற்கு ஆதார் எடுக்க முடியாமலும் திருத்தம் செய்ய முடியாமலும் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் திணறி வருகின்றனர்.பாதிக்கப்பட்டோர் கூறுகையில்; ஆதார் எடுப்பதற்கு 3 நாட்களுக்கு மேலாக அலைய வேண்டியுள்ளது. தாலுகா ஆபிஸ், போஸ்ட் ஆபீஸ் உட்பட 4 மையங்களுக்கு சென்று விட்டோம். சர்வர் பிரச்னை என்று தெரிவிக்கின்றனர். போஸ்ட் ஆபீஸில் சென்று கேட்டபோது 3 நாட்களுக்கு பிறகு வரும்படி தெரிவிக்கின்றனர். தினக்கூலி வேலை செய்யும் பலர் வேலையை விட்டுவிட்டு இதற்காக அலைகின்றனர். பணியாளர்கள் கூறுகையில்: ஆதார் திருத்தம் மற்றும் புதியதாக பதிய ஒருவருக்கு 20 நிமிடம் முதல் அரை மணி நேரம் வரை ஆகிறது. பொதுமக்கள் காத்திருப்பதை தடுப்பதற்கே டோக்கன் முறை கடைபிடிக்கப்படுகிறது.தினமும் 100க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். சர்வர் பிரச்னை தவிர மற்ற நேரங்களில் முறையாக தாமதமின்றி வழங்கப்படுகிறது.