| ADDED : பிப் 15, 2024 05:23 AM
சிவகங்கை: சிவகங்கையில் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.54.76 கோடியில் கட்டிய 608 வீடுகளில், உள்வாடகைக்கு விட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்க கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்தார்.சிவகங்கை அருகே வாணியங்குடி ஊராட்சி, அண்ணாமலை நகரில் இரண்டு கட்டமாக ரூ.54.76 கோடியில் 608 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு 2020 ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டன. முதற்கட்டமாக நகராட்சி எல்கைக்குட்பட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களை, அகற்றி அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி,இங்கு வீடுகள் வழங்கப்பட்டன. இது தவிர வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வீடு விற்பனை செய்தனர்.608 வீடுகளில்,400க்கும் மேற்பட்ட வீடுகள் விற்பனை ஆகியுள்ளன. எஞ்சிய 200 க்கும் மேற்பட்ட வீடுகள் காலியாக கிடக்கின்றன. தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் முட்புதர் மண்டியுள்ளன. சாக்கடை கால்வாய்களில் கழிவு நீர் செல்லாமல் தேங்கி, இங்கு குடியிருப்பவர்களுக்கு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.சாக்கடை கழிவுகளில் உருவாகும் கொசுக்களின் மூலம் இங்கு வசிக்கும் மக்களுக்கும்,அருகில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசிப்போருக்கும் நோய் தொற்று அதிகரிப்பதாக புகார் எழுந்துள்ளது.அங்கு குடியிருப்பவர்கள் கலெக்டர் ஆஷா அஜித்,கார்த்தி எம்.பி.,ஆகியோரிடம் புகார் அளித்தனர். கலெக்டர் ஆஷா அஜித்,சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,சுப்பிரமணி,பி.டி.ஓ.,(ஊராட்சி) செழியன் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு திட்ட அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது,வீடுகளை வாங்கியோர் குடியிருக்காமல்,உள்வாடகைக்கு விட்டிருப்பது தெரியவந்தது. உள்வாடகைக்கு விட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்க கலெக்டர் உத்தரவிட்டார்.மேலும் இப்பகுதியில் அடிக்கடி போலீசார் ரோந்து செல்லவும் வலியுறுத்தினார்.