| ADDED : பிப் 23, 2024 10:25 PM
சிவகங்கை:கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தடா கோயிலில் மதுரை ரவுடி ராமர் பாண்டி 36,யை கொலை செய்த வழக்கில் நேற்று சிவகங்கை நீதிமன்றத்தில் ஒருவர் சரண் அடைந்தார்.கடந்த 2012 அக்.,30ல் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு சென்று திரும்பியவர்கள் மீது, மதுரை சிந்தாமணி அருகே மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதில், புளியங்குளம் ஜெயபாண்டி, சுந்தரபாண்டியன் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக மதுரை அனுப்பானடி ராமர்பாண்டி, மோகன், கார்த்திக் 39, உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை பாதுகாப்பு கருதி கரூர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக பிப்., 19 ல் கரூர் நீதிமன்றத்தில் ஆஜரான பின், டூவீலரில் நண்பர் கார்த்திக் உடன் ராமர் பாண்டி திரும்பி சென்றார். அரவக்குறிச்சி அருகே தடாகோயில் என்ற இடத்தில் சென்றபோது, காரில் வந்த கும்பல் இவர்களை வழிமறித்து ராமர்பாண்டியை மட்டும் தலையை சிதைத்து கொலை செய்துவிட்டு தப்பினர். இதில் காயமுற்ற கார்த்திக், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இக்கொலை வழக்கு தொடர்பாக பிப்., 21 அன்று ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் நீதிமன்றத்தில் 5 பேர் சரண் அடைந்தனர். இந்த வழக்கில் தேடப்பட்ட கருப்பாயூரணி அருகே ஓடைப்பட்டி மனோஜ்கண்ணன் 21, நேற்று சிவகங்கை கூடுதல் மகிளா நீதிபதி ஆப்ரின் பேகம் முன் சரண் அடைந்தார். அவரை பிப்., 29 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.