உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அந்தரத்தில் நிற்கும் ஷட்டரால் பாலம் சேதமடையும் அபாயம்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அந்தரத்தில் நிற்கும் ஷட்டரால் பாலம் சேதமடையும் அபாயம்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்புவனம் : திருப்புவனம் வைகை ஆற்றில் மேம்பாலம் பலப்படுத்தும் பணி முழுமையாக செய்யாததால் பிரமனுார் கால்வாய் ஷட்டர் உள்ளிட்டவை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. திருப்புவனம் வைகை ஆற்றை கடந்து தான் மடப்புரம், வடகரை, பூவந்தி, சிவகங்கை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல முடியும். வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டு வாகனப்போக்குவரத்தும் நடந்து வருகிறது.நீர் வரத்து காலங்களில் பாலத்தின் துாண் அருகே தண்ணீர் ஒருபுறமே சென்றதால் பள்ளம் ஏற்பட்டு 30 அடி ஆழத்தில் தண்ணீர் நிரந்தரமாக தேங்கியுள்ளது.இந்த பள்ளத்தில் மீன் பிடிக்கவும், குளிக்கவும் சென்று பலரும் உயிரிழந்த நிலையில் பள்ளத்தை சரி செய்து பாலத்தின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.கொச்சியில் இருந்து திருப்புவனம் வழியாக தொண்டி வரை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டதால் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் பாலத்தை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.பாலத்தின் துாண்களைச் சுற்றிலும் சிமென்ட் கட்டடம் எழுப்பப்பட்டு, தண்ணீர் வந்து பாலத்தின் துாண்களை சேதப்படுத்தாத வண்ணம் இருபுறமும் சுவர் எழுப்பபட்டது. ஆனால் முழுமையாக செய்யாமல் பாலத்தின் ஆரம்ப இடத்தில் சிமென்ட் சுவர் இல்லாததால் தண்ணீர் வந்த வேகத்தில் அந்த இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பிரமனுார் கால்வாய் தடுப்புச்சுவரின் கீழ்பகுதி முற்றிலும் அரித்து சுவர் அந்தரத்தில் நிற்கிறது.மேலும் பிரமனுார் கால்வாயில் அளவிற்கு அதிகமாக தண்ணீர் வந்தால் வைகை ஆற்றில் திருப்பி விட பாலத்தின் கிழக்கு பகுதியில் ஷட்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் வந்த வேகத்தில் ஷட்டரின் அடிப்பகுதியிலும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தால் கூட ஷட்டர்களும், தடுப்புச்சுவரும் சாய்ந்து பாலத்தில் கடுமையாக சேதம் ஏற்பட வாய்ப்புண்டு, பலரும் இதனை சுட்டி காட்டியும் சீரமைக்காமல் ஒப்பந்தகாரர்கள் பணிகளை முடித்து சென்று விட்டனர்.எனவே மாவட்ட நிர்வாகம் பாலப்பணிகளை ஆய்வு செய்து பிரமனுார் கால்வாய் தடுப்புச்சுவர், ஷட்டர்களை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி