| ADDED : டிச 13, 2025 01:30 AM
சிவகங்கை: 'தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதியோர், மாற்றுத்திறனாளிக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் நாளிலேயே ரூ.1000 ஊக்கத் தொகையையும் வழங்க வேண்டும்,' என, தமிழக அரசை ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியது. தமிழகத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளி களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் தாயுமானவர் திட்டத்தை அரசு ஆகஸ்ட் முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் மூலம் மாநில அளவில் 16 லட்சத்து 73 ஆயிரத்து 333 ரேஷன் கார்டுகளை சேர்ந்த 21 லட்சத்து 70 ஆயிரத்து 455 பேர் பயன்பெறுகின்றனர். மாதந்தோறும் ஏதேனும் இரு நாட்கள் தாயுமானவர் திட்டம் மூலம் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு விற்பனையாளர்கள் நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை வினி யோகம் செய்து வரு கின்றனர். இத்திட்ட குறைபாடுகளை நீக்கி விற்பனையாளர்கள் முழு ஈடுபாட்டுடன் பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ரேஷன் பொருட்களை 'புளூடூத்' முறையில் விநியோகிப்பதை ரத்து செய்ய வேண்டும். குடும்ப தலைவரின் கைரேகை பலமுறை முயற்சித்தும் பதிவு செய்ய முடியாத நிலையில் அவருக்கு பதில் அவரது குடும்பத்தில் உள்ள வேறு நபரை நாமினியாக நியமிக்க வேண்டும். இத்திட்டத்திற்காக வாகனங்களில் பொருட்களை எடுத்து செல்லும் போது ஒரு உதவியாளரை நியமிக்க அனுமதிக்க வேண்டும். சர்வர் பிரச்னை ஏற்படாமல் இருந்தால் மட்டுமே பொருட்களை எளிதில் விநியோகம் செய்ய முடியும். எனவே சர்வர் பிரச்னை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய நிலையாக ஒரு தேதியை நிர்ணயிக்க வேண்டும். இத்திட்டத்தில் ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் நாட்களில் விற்பனையாளருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் ஊக்கத்தொகையும் வழங்க வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனரிடம் வலியுறுத்தியுள்ளார்.