காரைக்குடி : ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் 'சாப்பாட்டில் கை வைப்பதால்' மாணவர்கள் உணவுக்காக ஏங்கும் பரிதாப நிலை உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட விடுதி 43, ஆதி திராவிடர் விடுதி 39 உள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் 60 மாணவர்கள் வீதம் தங்கி படிக்கின்றனர். மாணவர்கள் எண்ணிக்கை படி அரிசி,பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள், சமையலுக்கு தேவையான காஸ் சிலிண்டர்கள் மாதந்தோறும் அரசு வழங்குகிறது. வாரத்தில் புதன்கிழமை மட்டும் சிக்கன் அல்லது மட்டன் வழங்கப்படும். ஆட்டு இறைச்சியாக இருந்தால் 100 கிராம், கோழி இறைச்சியாக இருந்தால் 120 கிராம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு மாணவருக்கும் பரிமாறப்படுவது வழக்கம். சமீபகாலமாக ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் இதுபோல் 'நான்வெஜ்' முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.தவிர, ஒரே அறையில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளதால் இடநெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.
சமையலர் ஒருவர் கூறுகையில், '' விடுதியில் ஒரு காப்பாளர், 2 சமையலர், ஒரு வாட்ச்மேன் இருக்க வேண்டும். ஆனால், ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் ஒரு சமையலர், ஒரு வாட்ச்மேன் மட்டுமே உள்ளனர். ஒரு காப்பாளர் இரண்டு விடுதிகளை கவனித்து வருகிறார். இதனால், விடுதிக்கு எப்போதாவது வருவார். காய்கறி வாங்குவது, சமைப்பது, பாத்திரங்கள் கழுவுவது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் சமையலரே செய்ய வேண்டும். தினமும் மூன்று வேளை சமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக சிக்கன், மட்டன் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் ஓட்டல்களுக்கு சென்று 'நான்வெஜ்' சாப்பிடும் பரிதாபம் உள்ளது'' என்றார்.
மாணவர்கள் சிலர் கூறுகையில், '' விடுமுறை நாட்களில் (சனி, ஞாயிறு) பெரும்பாலான மாணவர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிடுவர். இதனால், 10க்கும் குறைவான மாணவர்களே தங்கியிருப்பர். ஆனால், 60 பேருக்கு சமைத்துள்ளதாக கணக்கு காண்பிப்பர். இதை தட்டிக்கேட்டால் எங்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என மிரட்டுவர். தங்கியுள்ள அறையில் பேன், லைட் பழுது ஏற்பட்டால் அதை தாங்களே சரி செய்து கொள்ள வேண்டும் என கூறுவர். மாலை நேரங்களில் காப்பியுடன் சுண்டல் வழங்க வேண்டும். இதுவரை வழங்கியதே இல்லை. கடமைக்கு தங்கி படித்து வருகிறோம். கலெக்டர் ராஜாராமன் ஒரு முறை இந்த விடுதிகளில் திடீர் 'விசிட்' அடித்தால் உண்மை வெளிச்சத்துக்கு வரும்'' என்றனர்.