உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அறிவு பசிக்கு இரை போடும் புத்தக களஞ்சியம் : சிவகங்கை புத்தக கண்காட்சிக்கு வரவேற்பு

அறிவு பசிக்கு இரை போடும் புத்தக களஞ்சியம் : சிவகங்கை புத்தக கண்காட்சிக்கு வரவேற்பு

சிவகங்கை : சிவகங்கை புத்தக கண்காட்சி மற்றும் திருவிழாவில் இடம் பெற்றுள்ள பச்சை புடவைக்காரி', பொன்னியின் செல்வன்', உள்ளிட்ட புத்தகங்கள் வாசகர்களை படிக்க துாண்டும் விதத்தில் எழுதப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், கல்வி, நுாலகத்துறை, பபாசியுடன் இணைந்து புத்தக கண்காட்சி மற்றும் திருவிழா ஜன.,27 முதல் பிப்., 6 வரை நடைபெறுகிறது.இங்குள்ள 110 ஸ்டால்களில் 10 ஆயிரம் தலைப்புகளில் 10 லட்சம் புத்தகங்கள் வரை விற்பனைக்கு வந்துள்ளன.வாசகர்களின் ஒட்டு மொத்த புத்தக தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் பல்வேறு பதிப்பகத்தாரின் புத்தகங்கள் சிவகங்கை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.இங்கு, ஒவ்வொரு புத்தகத்தின் விலையில் 10 சதவீத வரை தள்ளுபடி வழங்குகின்றனர். ஒரு புத்தகத்தின் விலை ரூ.10 ல் இருந்து ரூ.1,000 வரை விற்கப்படுகிறது. வாசகர்கள் நேசிக்கும் அனைத்து வித புத்தகங்களும் புத்தக கண்காட்சியை அலங்கரிக்கின்றன. புத்தகங்களின் சிறப்பு பற்றி வாசகர்களின் கருத்து:

ஆன்மிக கருத்துக்கு விலையில்லை

ஏ.லதா, குடும்ப தலைவி, டி.புதுார், சிவகங்கை: தாமரை பிரதர்ஸ் மீடியா பி.,லிட் வெளியீட்டில், ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமி எழுதிய பச்சைபுடவைக்காரி (பாகம் 1) முழுமையாக படித்தேன். இந்த புத்தகத்தில் உள்ள அனைத்து கதைகளும் படிக்க படிக்க ஆவலை துாண்டும் விதத்தில் அமைந்துள்ளது.புத்தகத்தின் விலை ரூ.440 தான். ஆனால், இதில் உள்ள ஆன்மிக கருத்துக்களுக்கு விலைமதிப்பே இல்லை. இந்த புத்தகத்தை படிக்க படிக்க மதுரை அன்னை மீனாட்சியின் திருவடிக்கே சென்று ஆசிர்வாதம் பெறுவது போன்ற உணர்வு தோன்றுகிறது.

மன்னரின் நேர்மையான ஆட்சி

டீ.மகேஸ்வரி, பியூட்டிசன், சிவகங்கை: இந்த புத்தக கண்காட்சியில் நக்கீரன் பதிப்பக வெளியீட்டில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன்' 5 பாகத்தை நன்கு படித்து விட்டேன். இப்புத்தகம் மூலம் தமிழரின் பாரம்பரியம், பழங்கால மன்னர்களின் ஆட்சி முறை, மக்களுக்காக அரசர்கள் நடத்திய நேர்மையான ஆட்சி குறித்து படிக்க ஆவல் அதிகரிக்கிறது.தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவும் என்ற எண்ணத்தில் இந்த புத்தகத்தை ஆசிரியர் எழுதியுள்ளார். 5 பாகத்தையும் ஒரே தொகுதியாக மலர் வடிவத்தில் வெளியிட்டிருப்பது சிறப்பு. ஒரு புத்தகம் ரூ.510 ல் பழங்கால தமிழர்களின் பாரம்பரியத்தை அறிய முடிகிறது.

அறிவு பசிக்கு இரைபோடும் கண்காட்சி

எக்ஸ்.ஜேன், குடும்ப தலைவி, காளவாசல், சிவகங்கை: சிவகங்கை புத்தக கண்காட்சி ஒரே குடையின் கீழ், அறிவுப்பசிக்கு இரைபோடும்', களஞ்சியம்' ஆக காட்சி அளிக்கின்றன. பல்வேறு தலைப்புகளில் பெண்கள், மாணவர்கள், மாணவிகள், குடும்ப தலைவிகள், போட்டி தேர்வுக்கு தயாராவோர் என அனைத்து தரப்பினரின் தேவையையும் பூர்த்தி செய்யும் விதமாக பல்லாயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைத்துள்ளனர். சென்னை, மதுரை போன்ற நகர புத்தக கடைகளில் தேடி தேடி போனாலும், கிடைக்காத அரிய புத்தகங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்