| ADDED : ஜன 05, 2024 10:53 PM
ராமேஸ்வரம்:-இலங்கையில் இருந்து 7.700 கிலோ தங்கக் கட்டிகள் கடத்தி வந்த ராமேஸ்வரம் விசைப்படகு உரிமையாளர், கடத்தல்காரர்கள் யார் என மத்திய உளவுப்பிரிவு, தமிழக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ள நிலையில் கடல் வழி பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் ஜன.4 இரவு 10:00 மணிக்கு டூவீலரில் பதுக்கி வைத்திருந்த ரூ.4.80 கோடி மதிப்புள்ள 7.700 கிலோ தங்க கட்டிகளை ராமேஸ்வரம் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனை இலங்கையில் இருந்து அந்நாட்டு கடத்தல்காரர்கள் படகில் கடத்தி வந்துள்ளனர். மீனவர்கள் போர்வையில் நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரத்தை சேர்ந்த சிறிய ரக விசைப்படகில் இருந்த கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.இவர்கள் தங்கக் கட்டிகளை ராமேஸ்வரம் கரைக்கு கொண்டு வந்ததும் தங்கச்சிமடத்தை சேர்ந்த இருவர் வாங்கிக் கொண்டு டூவீலரில் சென்ற போது சுங்கத்துறையினர் மடக்கியதால் தங்கக்கட்டிகளை போட்டுவிட்டு இருவரும் தப்பி ஓடினர். இதனை இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடத்தி வந்த விசைப்படகின் உரிமையாளர், இப்படகில் இருந்த கடத்தல்காரர்கள் யார் என மத்திய உளவுப்பிரிவு, தமிழக போலீசார் விசாரிக்கின்றனர். கைது இல்லை
தங்கம் கடத்தலில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்யாமல் சுங்கத்துறையினர் கோட்டை விட்ட செயல் அவர்களை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது. அவர்களை கைது செய்தால் தான் பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடலில் தங்கம், போதை பொருள் கடத்தலை ஒழிக்க முடியும்.இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தாவிடில் நம் நாட்டின் கடல் வழி பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.