உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மழைநீரை சேமிக்க மலையடிவாரங்களில் சிறு நீர்த்தேக்கங்கள் அமைக்க வேண்டும் வனவிலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும்

மழைநீரை சேமிக்க மலையடிவாரங்களில் சிறு நீர்த்தேக்கங்கள் அமைக்க வேண்டும் வனவிலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும்

கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் வீணாகும் நீரை சேமிக்க ரோட்டிற்கு மேற்கு பகுதி மலையடிவாரங்களில் சிறிய நீர்த் தேக்கங்களை அமைக்க மானாவாரி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கம்பம் பள்ளத்தாக்கில் 20 ஆயிரம் ஏக்கரில் பாசன வசதியும், தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட குடிநீர் ஆதாராமாகவும் முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. தேனி மாவட்ட தண்ணீர் தேவையை போக்குகிறது.ஆனால் லோயர்கேம்பில் துவங்கி தேனி வரை ரோட்டிற்கு மேற்கு பகுதி மானாவாரி நிலங்களாகவே உள்ளது. இதில் சோளம், கம்பு, மக்காச் சோளம், பயறு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடியாகிறது. இப் பகுதிகளை கண்மாய் பாசனத்திற்கு மாற்ற 18 ம் கால்வாய் வெட்டப்பட்டது. ஆனாலும் வழக்கமான பாசன வசதி இல்லை. ஆண்டில் குறிப்பிட்ட நாட்களே கால்வாயில் தண்ணீர் வழங்குவதால் மானாவாரி நிலங்களின் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. இன்னும் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது.லோயர்கேம்பில் ஆரம்பித்து தேவாரம் வரையிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்கள் உள்ளன. மழை கிடைத்தால் விவசாயம் செய்ய முடியும். சமீபத்தில் பெய்த மழையால் கிடைத்த நீரை வைத்து தற்போது குத்து அவரை, சோளம், எள்ளு பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர். ஆனால் ஆண்டுதோறும் சேமித்து வைக்க வழியில்லாததால், தண்ணீர் பெரிய அளவில் வீணாகிறது.மழை காலங்களில் மலைக்குன்றுகளிலிருந்து வெளியேறும் தண்ணீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஒடி வீணாகி ஆற்றில் கலக்கிறது. எனவே, கம்பம் பள்ளத்தாக்கில் ரோட்டிற்கு மேற்கு பக்கம் மலையடிவாரங்களில் சிறிய நீர்த் தேக்கங்களை அமைக்க வேண்டும். இதனால் மழை காலங்களில் வெளியேறும் தண்ணீர் வீணாகாமல் சேமிக்கப்படும்.இதன்மூலம் மானாவாரி நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர பயன்படும், கால்நடைகள் மற்றும் வனப்பகுதியிலிருந்து மானாவாரி நிலங்களுக்கு வரும் வன உயிரினங்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும்.முன்னதாக மலையடிவார குளங்கள் சர்வே செய்து ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். நீர்வழித்தடங்கள், விளை நிலங்களாக மாற்றப்பட்டதையும் கையகப்படுத்தி மீண்டும் நீர் வழித்தடமாக மாற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை