| ADDED : ஜூன் 18, 2024 05:02 AM
கம்பம், : விவசாயிகளுக்கு திராட்சையில் நவீன தொழில் நுட்ப பயிற்சி வழங்க வேண்டும்.கம்பம் பள்ளத்தாக்கில் பன்னீர் திராட்சையும், ஒடைப்பட்டி பகுதியில் விதையில்லா திராட்சையும் சாகுபடியாகிறது. இதில் பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கைக்கு விடிவு ஏற்பட்டுள்ளது. இருந்த போதும் மழை, பனி காலங்களில் செவட்டை நோய், அடிச்சாம்பல் நோய், மகசூல் பாதிப்பு, விலை கிடைக்காமல் போவது உள்ளிட்ட பல பிரச்னைகள் தொடர்கின்றன.இது தொடர்பாக கலெக்டர் ஷஜீவனா ஆராய்ச்சி நிலையத்திற்கும், தோட்டக்கலைத் துறைக்கும் கடந்தாண்டு ஆலோசனைகள் வழங்கினார். ஆனால் இதுவரை அந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.திராட்சை விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பம், மார்க்கெட்டிங் பிரச்னைகளை தீர்ப்பது, அதிக மகசூலுக்கான வழிமுறைகள் பற்றி கூற வேண்டும். வெப்பம், தொடர் மழை காலங்களில் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்களை விளக்க வேண்டும். முன்னோடி விவசாயிகளை அழைத்து அவர்களின் அனுபவங்கள், ஆலோசனைகளை பிற விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கான பணிகளை திராட்சை ஆராய்ச்சி நிலையமும், தோட்டக்கலைத்துறை மாற்றும் வேளாண் வணிக துறையினர் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.