| ADDED : ஆக 13, 2024 11:31 PM
மூணாறு : மூணாறில் தேயிலை தோட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.மூணாறில் டாடா கம்பெனிக்குச் சொந்தமான தேயிலை தோட்டங்கள், கடந்த 2005 முதல் தொழிலாளர்களை பங்குதாரர்களாக உட்படுத்தி கே.டி.எச்.பி. கம்பெனி என செயல்பட்டு வருகிறது. அவற்றில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நிரந்தரமாக வேலை செய்கின்றனர். அவர்கள் அனைவரும் தமிழர்களாகும்.தென் மேற்கு பருவ மழையின்போது பச்சை தேயிலை பறிப்பு அதிகரிக்கும். நிர்வாகத்தினரின் அலட்சியத்தால், தற்போது பச்சை தேயிலை பறிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களில் 'கொழுந்து' எனப்படும் பச்சை தேயிலைகிள்ளி எடுக்கப்பட்டதால், தேயிலை பறிக்கும் சுழற்சி முறை சரியாக கடைபிடிக்கப்பட்டது.சமீபகாலமாக உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் கத்தரி பயன்படுத்திய நிலையில், இயந்திரமும் பயன்படுத்தப்படுகிறது. அதனால் மறு உற்பத்திக்கு தேவையான ' அரும்பு' உள்பட பச்சை தேயிலை வெட்டப்படுகிறது. தவிர வட மாநிலத் தொழிலாளர்கள் அதிக ஊதியம் பெரும் நோக்கத்தில் ஒரே நாளில் பல ஏக்கரில் பச்சை தேயிலையை வெட்டி விடுகின்றனர்.இது போன்ற காரணங்களால் பல எஸ்டேட்டுகளில் பச்சை தேயிலை பறிக்க இயலாத நிலை ஏற்பட்டு பல எஸ்டேட்டுகளில் தொழிலாளர்களுக்கு பணி வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.இது போன்ற சூழல் தோட்டங்கள் உருவாகி ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆன நிலையில், தற்போது முதன்முறையாக ஏற்பட்டதால் தொழிலாளர்கள் கவலை அடைந்தனர்.பிள்ளைகளின் படிப்பு உள்பட பல்வேறு பல்வேறு தேவைகளை தொழிலாளர்கள் ஊதியத்தை கொண்டு சமாளித்து வரும் நிலையில் அவர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே வேலை வழங்க இயலாததற்கு நிர்வாகம் பொறுப்பேற்று ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.