| ADDED : நவ 22, 2025 03:47 AM
போடி: போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் விலக்கில் ரூ. 2.40 கோடி செலவில் பாலம், ரோடு அகலப்படுத்தும் பணியினை நெடுஞ்சாலைத்துறை துவங்கி உள்ளது. போடி அருகே மேலச்சொக்கநாதபுரம், விசுவாசபுரம், மீனாட்சிபுரம், டொம்புச்சேரி, உப்புக்கோட்டை செல்லவும், சிலமலை, சில்லமரத்துப்பட்டி உட்பட தேவாரம் செல்லும் மெயின் ரோட்டில் மேலச்சொக்கநாதபுரம் விலக்கு அமைந்து உள்ளது. மேலச்சொக்கநாதபுரம் விலக்கில் ரோடு அகலம் இன்றி, குறுகலாகவும், வளைவாகவும் உள்ளது. இதனால் கனரக வாகனங்களை செல்ல வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுவதோடு, உயிர் பலியாகும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க ரோடு அகலப்படுத்தி, பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறையிடம் வலியுறுத்தினர். ஒருங்கிணைந்த சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 2.40 கோடி செலவில் 30 அடி அகலம் இருந்த ரோட்டை 52 அடி அகலமாகவும், பாலம் அகலப்படுத்தி தடுப்புச்சுவர், ரவுண்டானா, சென்டர் மீடியன் அமைப்பதற்கான பணிகளும் துவங்கப்பட்டு உள்ளன. இதற்கான பணியினை நெடுஞ்சாலைத் துறை தேனி கோட்ட பொறியாளர் குமணன், போடி உதவி கோட்ட பொறியாளர் இளம்பூரணம், உதவி பொறியாளர் ராஜாராம் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.