உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி நகராட்சியில் தி.மு.க., கோஷ்டி பூசலால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு

தேனி நகராட்சியில் தி.மு.க., கோஷ்டி பூசலால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு

தேனி நகராட்சியில் தி.மு.க.,வைச் சேர்ந்த ரேணுப்பிரியா தலைவராக உள்ளார். இவரது கணவர் பாலமுருகன் கவுன்சிலராக உள்ளார். துணைத்தலைவராக தி.மு.க., வைச் சேர்ந்த செல்வம் உள்ளார். நகராட்சி நிர்வாகத்தில் திட்டப்பணிகளில் முறைகேடு செய்வதாக கூறி துணைத்தலைவர் தலைமையிலான கவுன்சிலர்கள் 2023 டிசம்பர் முதல் போர்கொடி துாக்கினர். தொடர்ந்து நகராட்சி கூட்டங்கள், நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகின்றனர்.இந்நிலையில் தேனி புது பஸ் ஸ்டாண்டில் உள்ள டூவீலர் ஸ்டாண்டுகள், நகராட்சியில் உள்ள கட்டண கழிப்பறைகள், மர ஏலம் ஆகியவற்றிற்கு ஜன., 30ல் ஏலம் அறிவிக்கப்பட்டிருந்தது. நகராட்சியில் கவுன்சிலர்களிடையே தொடரும் கோஷ்டி பூசலால் ' நிர்வாக காரணங்களுக்காக ஏலம் ரத்து செய்யப்படுகிறது' என அறிவித்து ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. ஏலம் மூலம் நகராட்சிக்கு கிடைக்கும் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நகராட்சி சுகாதார பணியாளர்கள் மூலம் டூவீலர் ஸ்டாண்டு உள்ளிட்ட இடங்களில் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு உண்மையில் எவ்வளவு வசூலிக்கப்படுகிறது, எவ்வளவு நகராட்சிக்கு கணக்கு காட்டப்படுகிறது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இதனால் நகரில் சுகாதாரப்பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.பிப்.,12ல் நடந்த நகராட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தலைவர் அறிவித்தாலும், எதிர்தரப்பினர் நீதிமன்றம் சென்றுள்ளனர். இதனால் நகராட்சியில் வளர்ச்சி பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் துணைத்தலைவரின் ஆதரவு கவுன்சிலர்கள் வார்டில் எவ்வித பணியும் மேற்கொள்ள கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக புகார் கூறுகின்றனர். இதனால் பல வார்டுகளில் சுகாதாரம் பாதித்து வருகிறது. கவுன்சிலர்கள் கோஷ்டி பூசலால் அதிகாரிகளும் பணிகளில் ஆர்வம் காட்டாமல் அமைதி காத்து வருகின்றனர். இதனால் நகராட்சியில் வளர்ச்சித்திட்ட பணிகள், சுகாதாரப்பணிகள், வருவாய் அதிகரிக்கும் திட்டங்கள் முடங்கி உள்ளன. இப் பிரச்னைகளால் மக்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனர். நகராட்சியில் திட்ட பணிகள் முறையாக நடைபெற உயர் அதிகாரிகள் தலையீட்டு பிரச்னைகளை களைந்து நிர்வாகம் வழக்கம் போல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ