உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வழிகாட்டுங்கள் மலைமாடுகளின் தீவன பிரச்னைக்கு

வழிகாட்டுங்கள் மலைமாடுகளின் தீவன பிரச்னைக்கு

கம்பம்: தேனி மாவட்டத்தில் வளர்க்கப்படும் பாரம்பரிய மலைமாடுகளுக்கு தீவன பிரச்னை உள்ளதால் மரபு சாரா தீவன மேலாண்மை பயிற்சி தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி,ஆராய்ச்சி நிலையம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் சின்ன ஒவுலாபுரம், ராயப்பன்பட்டி, எரசக்கநாயக்கனுார், முத்துலாபுரம், காமாட்சிபுரம், காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்களில் மலைமாடுகள் எனும் நாட்டு மாடுகள் வளர்க்கப்படுகிறது. உலக அளவில் 52 இனங்கள் உள்ளன. தமிழகத்தில் 7 இனங்கள் உள்ளன. அவற்றில் காங்கேயம், பர்கூர், புலிக்குளம், தும்மலாஞ்சேரி ஆகிய 4 இனங்களை இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் அங்கீகரித்துள்ளது. இந்த நான்கு இனங்கள் தேனி மாவட்ட மலைமாடுகளில் உள்ளதா என்றும், இருந்தால் அவற்றை பாதுகாத்து பராமரிக்கவும், இல்லையென்றால் இங்குள்ள மாடுகளின் பூர்வீகம் என்ன என்பது பற்றியும் ஆய்வு செய்து, அவற்றிற்கு அங்கீகாரம் பெறுவதற்காக மலைமாடுகள் கண்காட்சி, கருத்தரங்கம் கடந்த செப்., சின்னமனூர் அருகே சின்ன ஒவுலாபுரத்தில் கால்நடை பல்கலை நடத்தியது. மேலும் மலைமாடுகள் வளர்ப்பவர்களிடம் அறிவியல் ரீதியாக பராமரிப்பு, இனவிருத்தி, மரபுசாரா தீவன மேலாண்மை, நோய் தடுப்பு முறைகளை விளக்கினர்.ஆனாலும் மலைமாடு வளர்ப்பவர்களுக்கு பிரதான பிரச்னையாக உள்ள தீவனபிரச்னையில் யாரும் கவனம் செலுத்தவில்லை. வனப்பகுதியில் நாட்டு மாடுகளுக்கு மேய்ச்சலுக்கு அனுமதி மறுக்கின்றனர். எனவே மலைமாடு வளர்ப்பவர்களுக்கு உள்ள தீவனபிரச்னையை தீர்க்க கால்நடை பல்கலை வழிகாட்ட வேண்டும்.மரபுசாரா தீவன வளர்க்க தாடிச்சேரி, தப்புக்குண்டு, தேவாரம் பகுதிகளில் மானாவாரி நிலங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால் இன்னமும் முடிவிற்கு வரவில்லை. எனவே மரபு சாரா தீவன உற்பத்தி திட்டங்களை துவக்கி மலை மாடுகள் வளர்ப்பவர்களுக்கு இது குறித்த பயிற்சி வழங்க வேண்டும். அப்போது தான் மலைமாடுகளின் தீவன பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை