| ADDED : மே 01, 2024 08:02 AM
மனிதர்களின் அனைத்து தேவைகளுக்கும் மின்சாரம் தேவைப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் மின்தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. பல வழிகளில் மின் உற்பத்தி செய்தாலும், உற்பத்திக்கும், தேவைக்கும் உள்ள இடைவெளி அதிகரித்து வருகிறது. எனவே மத்திய அரசு சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை வீடுகளுக்கு அறிமுகம் செய்து, இத் திட்டத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டத்திற்குஒரு கிலோவாட் மின் உற்பத்தி செய்வோருக்கு ரூ.30 ஆயிரம், இரண்டு கிலோவாட் மின் உற்பத்தி திறனுக்கு ரூ.60 ஆயிரம், 3 கிலோவாட் உற்பத்திக்கு ரூ.78 ஆயிரம் மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. திட்டம் செயல்படுத்தும் பயனாளிகளுக்கு மானியம் வங்கி கணக்கில் வரவாகும்.ஆனால் விண்ணப்பிக்கும் பொது மக்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஒரு கிலோ வாட் என்றால் ரூ.70 ஆயிரம், 2 கிலோவாட்க்கு ரூ. 1,40,000 செலுத்த வேண்டும். மின் உற்பத்தியில் 300 யூனிட் உங்கள் வீட்டில் உற்பத்தியில் 200 யூனிட் பயன்படுத்தினால், மீதமுள்ள 100 யூனிட்டை மின்வாரியம் எடுத்து கொள்ளும். அதற்கு கட்டணம் வாரியம் வழங்காது. ஆனால் மின் பயன்பாட்டில் அதை சமன் செய்து கொள்ளும்.தேர்தலில் முடங்கிய பணி:தேனி மாவட்டத்தில் ஒரு உதவி பொறியாளர் ஆயிரம் வீடுகளுக்கு சோலார் பேனல் பொருத்தவும், மாவட்டத்தில் உள்ள 44 உதவி பொறியாளர்களும் சேர்ந்து 44 ஆயிரம் வீடுகளுக்கு சோலார் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயித்து பணிகளை கடந்த மார்ச்சில் துவக்கினார்கள். அடுத்த சில நாட்களில் தேர்தல் அறிவிப்பால் திட்டம் செயல்பாடு நின்றது. தற்போது தேர்தல் முடிந்த நிலையில் திட்டத்தை செயல்படுத்த வாரிய அதிகாரிகள் முழு வீச்சில் களம் இறங்குவார்கள் என்று வாரிய வட்டாரங்கள் கூறுகின்றன..சோலார் பேனல் இணைப்பு பெறும் வீடுகளுக்கு 'பைவே' மீட்டர் பொருத்தப்படும். பொருத்தியவுடன் வீடுகளில் தற்போதுள்ள மீட்டர் அகற்றப்படும். வீட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் துணை மின் நிலையத்திற்கு செல்வதையும், மின் நிலையத்திலிருந்து சம்பந்தப்பட்ட வீட்டின் பயன்பாட்டிற்கு மின்சாரம் செல்வதும் கணக்கீடு செய்ய பைவே மீட்டர் பொருத்தப்படும் என்று தெரிகிறது.