| ADDED : ஜூன் 08, 2024 10:57 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 41 தொடக்க பள்ளிகள், 4 நடுநிலை பள்ளிகள், 6 உயர்நிலை பள்ளிகள், 6 மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 57 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், நடப்பு 2024-25 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடை பெற்று வருகிறது.அரசு பள்ளிகளில் ஒன்று முதல் - பிளஸ் 2 வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, அரசு பணியில் 20 சதவீத முன்னுரிமையும், 6 முதல்- - பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வில் 7.5 சதவீத முன்னுரிமையும் கிடைக்கும். மேலும், பெண் கல்வி இடைநிற்றலை தடுக்க அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இது போன்று பல்வேறு நலத்திட்டங்கள், உதவி தொகை அரசு வழங்கி வருவதால், பெற்றோர் தங்களது 5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளை அருகில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் சேர்த்து, அரசு நலத்திட்ட உதவியுடன் இலவசமாக கல்வி பயின்று பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.