உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சேதமடைந்த கட்டடத்தில் இயங்கும் பாலவேடு அங்கன்வாடி மையம்

சேதமடைந்த கட்டடத்தில் இயங்கும் பாலவேடு அங்கன்வாடி மையம்

ஆவடி:திருவள்ளூர் மாவட்டம், பாலவேடு ஊராட்சி, மாதவரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்டது. பாலவேடு ஊராட்சியில் ஐந்து பழைய அங்கன்வாடி மையங்களும், இரண்டு புதிய அங்கன்வாடி மையங்களும் செயல்படுகின்றன. இவற்றில், 120 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெறுகின்றனர். பாலவேடு ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஓராண்டுக்கு மேலாக உதவியாளர்கள் இல்லாமல் ஆசிரியர்களுடன் மட்டுமே செயல்படுகின்றன. இதனால், குழந்தைகளுக்கு கற்பிப்பது தாண்டி, உணவு தயார் செய்வது, குழந்தைகளை பராமரிப்பது உள்ளிட்ட வேலைகளை, ஒருவரே செய்து வருகின்றனர்.பாலவேடு ஊராட்சி, கரிமேடு, அண்ணா நகரில் உள்ள அங்கன்வாடி மையம், 15 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகள் இல்லாமல், சிதிலமடைந்த கட்டடத்தில் செயல்படுகிறது. இங்கு, குடிப்பதற்கும், கழிப்பறைக்கும் தண்ணீர் வசதி இல்லை. இதனால், அருகில் உள்ள வீடுகளில், தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். 'கட்டடத்தை சுற்றி புதர் மண்டி காட்சி அளிப்பதால், ஜன்னல் வழியாக பாம்புகள், விஷ ஜந்துக்கள் உள்ளே புகுந்து விடுகின்றன.சில மாதங்களுக்கு முன், அங்கன்வாடி கூரையில் காரைகள் உதிர்ந்து விழுந்துள்ளது. குழந்தைகள் நலன் கருதி அங்கு பணியாற்றும் ஆசிரியர், அதையும், கழிப்பறையையும் சொந்த செலவில் சீரமைத்துள்ளார். இதுகுறித்து, துறை சார்ந்தவர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அங்கன்வாடி மையங்களை திருவள்ளூர் கலெக்டர் ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூகநல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி