ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம் ஊராட்சியில் கிராமத்தை ஒட்டிய மலையில், 100 நாள் வேலை திட்டத்தின் படி, பழத்தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், மா, கொய்யா, நாவல், அத்தி, வாழை, நெல்லி, சப்போட்டா, பப்பாளி உள்ளிட்ட பல்வேறு பழமரக்கன்றுகளும், காய்கறிகளும் பயிரிடப்பட்டு வருகிறது. பாசன வசதிக்காக, மலையில் ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, தக்காளி, கத்தரி, வெண்டை, தர்ப்பூசணி உள்ளிட்டவை இங்கு விளைந்து வருகின்றன. இந்த காய்கறியை விற்பனை செய்வதில் கிடைக்கம் வருவாய், ஊராட்சியின் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், நீண்டகால பயிரான பழமரங்களில், முந்திரி தற்போது முதல் முறையாக காய்க்க துவங்கியுள்ளது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசு கூறியதாவது:நானும் ஒரு விவசாயி என்பதால், இயல்பாகவே மரக்கன்றுகள் வளர்ப்பதில் எனக்கு ஆர்வம் உள்ளது. தரிசாக கிடந்த இந்த மலையில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், மரகன்றுகள் நட்டு பராமரிக்க துவங்கினோம். ஏற்கனவே காய்கறி விளைச்சல் துவங்கியுள்ள நிலையில், தற்போது முந்திரி மரக்கன்றுகளும் காய்க்க துவங்கியுள்ளன. இதனால், 100 நாள் வேலை தொழிலாளர்களும், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிவாசிகளும் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.