| ADDED : ஆக 19, 2024 11:10 PM
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் பனப்பாக்கம் ஊராட்சியில் இருந்து கனகம்மாசத்திரம் செல்லும் சாலையின் குறுக்கே ஓடை செல்கிறது.இந்த ஓடையை மழைக்காலத்தில் கடந்து செல்ல முடியாமல் அப்பகுதிவாசிகள் அவதியடைந்தனர்.இதையடுத்து ஓடைக்கால்வாய் மீது உயர்மட்டப்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து 2017ம் ஆண்டு உயர்மட்டப்பாலம் கட்ட தீர்மானிக்கப்பட்டது.அதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் செயலாக்கத்துறை சார்பில் 30 மீட்டர் நீளத்தில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் உயர்மட்டப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டு 2018ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. பயன்பாட்டுக்கு வந்த அடுத்த ஆண்டே பெய்த கனமழையில், உயர்மட்ட பாலத்தின் இருபுறமும் உள்ள சாலை சேதமடைந்தது. இதனால், பனப்பாக்கம் கிராம மக்கள் அதிருப்தி அடைந்தனர். மேலும் சேதமடைந்த சாலை இதுவரை சீரமைக்காமல், அவர்கள் மெத்தனமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.மேலும் ஒருவாரத்தில் நான்குக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளனர்.பாலம் கட்டி 5 ஆண்டுகள் மட்டுமே ஆகும் நிலையில், உயர்மட்டப்பால சாலை சேதமடைந்து உள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உயர்மட்டப்பால சாலையை சீரமைக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.