| ADDED : ஆக 21, 2024 12:16 AM
மீஞ்சூர்:மீஞ்சூர் ஒன்றியம், நாலுார் ஊராட்சிக்கு உட்பட்ட நாலுார் ஏரிமேடு பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளுக்கு கடந்த, 10 நாட்களாக சீரான குடிநீர் வினியோகம் இல்லை.ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் கிராமவாசிகள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குடியிருப்புகளுக்கு குடிநீர் வரும் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யப்படாமல் உள்ளது.இந்நிலையில், கிராமவாசிகள் ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து, நேற்று பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.உடனடியாக உடைப்புகளை சரிசெய்தும். புதிய ஆழ்துளை கிணறு அமைத்தும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பொன்னேரி - மீஞ்சூர் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.