திருவள்ளூர்: தலக்காஞ்சேரி சாலை நடுவில் மின்கம்பத்தை அகற்றாமல், பாலம் அமைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் சாலையில் இருந்து தலக்காஞ்சேரி கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலையின் இருபகுதியிலும், திருமண மண்டபங்கள், நெல் அரவை மில், தனியார் மற்றும் நகராட்சி பள்ளிகள் அமைந்துள்ளன. மேலும், சாலையோரம் உள்ள, பெரும்பாக்கம் காலனியில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இச்சாலை வழியாக பள்ளி மாணவ, மாணவியர், பகுதி மக்கள் மற்றும் தலக்காஞ்சேரி கிராம மக்கள் என, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். மேலும், இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் வேன்கள் என, தினமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையின் வலது புறம் மழைநீர் கால்வாய் அமைந்துள்ளது. காமராஜர் சாலை பகுதியில், பெய்யும் மழைநீர் அந்த கால்வாய் வழியாக, தனியார் பள்ளி அருகில் இடதுபுறம் சாலையைக் கடந்து, தலக்காஞ்சேரி ஏரிக்கு சென்றடையும். மழைக்காலத்தில், சாலை நடுவில் அமைக்கப்பட்ட, பாலம் குறுகலாக இருப்பதால், அதன் வழியாக தண்ணீர் செல்ல முடியாமல், அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில், தேங்கி விடுகிறது. இதையடுத்து, நகராட்சி சார்பில், கால்வாயை அகலப்படுத்தி, சிறுபாலம் அமைக்கப்பட்டு வருகிறது. பாலத்தின் நடுவில், சாலையின் குறுக்கே உள்ள மின்கம்பத்தை அகற்றாமல் அமைக்கப்பட்டுள்ளதால், அந்த வழியாக, வாகனங்கள் செல்ல சிரமப்படுகின்றன. குறிப்பாக, கனரக வாகனங்கள் மற்றும் பள்ளி பேருந்துகள், மின்கம்பம் நடுவில், நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன. எனவே, சாலை நடுவில் உள்ள மின்கம்பத்தை, சாலையோரமாக மாற்றி அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.