| ADDED : நவ 22, 2025 02:06 AM
திருவள்ளூர்: நேதாஜி சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் கால்வாய், சில இடங்களில் வளைந்தும், உயர்ந்தும் இருப்பதால், மழைநீர் தேங்கும் அபாயம் உள்ளதாக, முன்னாள் அமைச்சர் புகார் தெரிவித்தார். திருவள்ளூர் நேதாஜி சாலையில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதால், பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, நெடுஞ்சாலை துறை சார்பில், 7 கோடி ரூபாய் மதிப்பில், பஜார் வீதியில் இருந்து ஜே.என்.சாலை சந்திப்பு வரை, நேதாஜி சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை, திரு வள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரமணா நேற்று பார்வையிட்டார். பின், அமைச்சர் ரமணா கூறியதாவது: நேதாஜி சாலையில், தற்போது கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், சாலை குறுகி, போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. சரியான திட்டமிடல் இல்லாததால் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும், குடியிருப்பு பகுதியின் சில இடங்களில் கால்வாய் உயரமாகவும், வளைந்து - நெளிந்தும் உள்ளதால், வீடுகள் பள்ளத்தில் சென்று, மழைநீர் தேங்கும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பின், கலெக்டர் பிரதாப்பை சந்தித்து மனு அளித்தார்.