| ADDED : ஜன 11, 2024 11:13 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடந்தது.புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும், மஞ்சப்பை பயன்படுத்த வேண்டுமென இந்திரா கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 200 மாணவ - மாணவியர் பேரணியில் பங்கேற்றனர்.பேரணியை திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் மணிமேகலை, உதவி பொறியாளர்கள் ஸ்ரீலேகா, சபரிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய திருவள்ளூர் மாவட்ட அலுவலகம் சார்பில், புகை மாசு தடுப்பு விழிப்புணர்வை ஆட்டோ வாயிலாக திருவாலங்காடு ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, போகி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாட வேண்டுமென, பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.போகி பண்டிகை நாளில், ரப்பர், டயர், பிளாஸ்டிக் மற்றும் அனைத்து உபயோகமற்ற பொருட்களை எரிக்க வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது.