| ADDED : ஜன 15, 2024 12:15 AM
திருத்தணி: மத்திய அரசு பழங்குடியின மக்களுக்கு, இலவச மின் இணைப்பு, குடிநீர், சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருகின்றன. அந்த வகையில், திருத்தணி ஒன்றியம் சின்னகடம்பூர், கார்த்திகேயபுரம், சத்திரஞ்ஜெயபுரம் ஆகிய கிராமங்களில், 65 பழங்குடியினருக்கு, பி.எம்.ஜென்மன் திட்டத்தின் கீழ் மின் இணைப்பை, திருத்தணி மின்வாரியம் வழங்கியது.ஆனால், மின் இணைப்புக்கு தேவையான உபகரணங்கள் வாங்க வசதியில்லாமல் பழங்குடியின மக்கள் தவித்து வந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருத்தணி பீகாக் மருத்துவமனை மற்றும் ஸ்ரீகிரண் பவுண்டேஷன் சார்பில், மின் இணைப்பு பெற மின்சாதன உபகரணங்களான மீட்டர் பாக்ஸ், ஒயர், குழாய் போன்ற பொருட்கள் வழங்க தீர்மானித்து, அதற்கான விழா நேற்று திருத்தணியில் நடந்தது.இதில், பீகாக் மருத்துவமனை மற்றும் ஸ்ரீகரண் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஸ்ரீகிரண் பங்கேற்று, 65 பழங்குடியினருக்கு மின்சாதன உபகரணங்கள் வழங்கினார்.இதில், சின்னகடம்பூர் ஊராட்சி தலைவர் அங்கைய்யா, கார்த்திகேயபுரம் பழங்குடியின வார்டு உறுப்பினர் தேவி, மாநில வனவாசி இணை செயலர் சேவாந்திரம் உட்பட பலர் பங்கேற்றனர்.