உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் தைப்பூச விழா கோலாகலம் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருத்தணியில் தைப்பூச விழா கோலாகலம் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் நேற்று தைப்பூசம் முன்னிட்டு, அதிகாலை,4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, சந்தன காப்பு, தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. அதே நேரத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது.நேற்று தைப்பூசம் மற்றும் மூன்று நாட்கள் தொடர்விடுமுறை என்பதால் வழக்கத்திற்கு மாறாக, ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.பொதுவழியில் பக்தர்கள், ஆறுமணி நேரமும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் குறைந்த பட்சம் இரண்டரை மணி நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி தேர்வீதியில் ஒரு முறை வலம் வந்து அருள்பாலித்தார்.மலைக்கோவிலில் அதிகளவில் பக்தர்கள் இருந்ததாலும், மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் இருந்ததால், கார், வேன் மற்றும் பேருந்துகள் மலைப்பாதை நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தபட்டன.இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் மட்டும் மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டன. தைப்பூசம் ஒட்டி திரைப்பட நடிகரும், இயக்குனருமான சசிகுமார் நேற்று முருகன் கோவில் தரிசனம் செய்தார்.பக்தர்கள் பாதுகாப்பிற்காக மாவட்ட எஸ்.பி.,சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தலைமையில், 120க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.நேற்று திருவள்ளூர் பூங்கா நகர் சிவ விஷ்ணு கோவிலில், வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு, சிறப்பு அலங்காரம், அபிேஷகம் நடந்தது. பின், வள்ளலாருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில், சுப்ரமணியருக்கும், வள்ளலாருக்கும் காலை முதல் இரவு வரை சிறப்பு அபிேஷகம் நடந்தது. இதில், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பக்தர்கள் கலந்து கொண்டனர்.பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் ஸ்ரீபாலசுப்ரமணியசுவாமி, பெரும்பேடு முத்து குமாரசாமி, குமரஞ்சேரி முருகன் ஆகிய கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள் நடந்தன.பொன்னேரி ஸ்ரீஅகத்தீஸ்வர், திருப்பாலைவனம் பாலீஸ்வரர், மீஞ்சூர் ஏகாம்பரநாதர், திருவேங்கிடபுரம் ஸ்ரீபொன்னியம்மன் ஆகிய தலங்களில் உள்ள முருகன் சன்னிதிகளில் சிறப்பு தீப ஆராதனைகள் நடந்தன. திருவாலங்காடு ஒன்றியம் பாகசாலை ஊராட்சியில் கொசஸ்தலையாற்றின் தென்புறத்தில் அமைந்துள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு நேற்று தைப்பூசத்தை ஒட்டி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 10:00 மணிக்கு மஹா அபிஷேகமும், 10:30 மணிக்கு முத்தங்கி சேவை மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு உற்சவர் முருகப்பெருமான் மந்திர மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.ஊத்துக்கோட்டை அடுத்த வடதில்லை ஸ்ரீபாஹரேஸ்வரர் கோவிலில் உள்ள முருகப் பெருமான் சன்னிதியில், காலை சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் 108 பால்குடம் ஏந்திச் சென்று சுவாமிக்கு அபிேஷகம் செய்தனர். பின் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில், பெரிய மலையில் யோக நரசிம்மரும், சின்னமலையில் யோக அனுமனும் அருள்பாலித்து வருகின்றனர். யோக நரசிம்மரின் உற்வச மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில், சோளிங்கர் நகரில் அமைந்துள்ளது.தைப்பூசத்தை ஒட்டி, பக்தோசித பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக நேற்று கொண்டபாளையத்தில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினார். கொண்டபாளையம், சின்ன மலையடிவாரத்தில் உள்ள பாண்டவ தீர்த்த குளக்கரையில் அமைந்துள்ள தைப்பூச மண்டபத்தில், திரளான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை