திருவாலங்காடு: திருவள்ளூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஏராளமான வாகனங்களில் பதிவு எண் இல்லாமல் உள்ளது. இந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி உட்பட நான்கு வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்டு, லட்சக்கணக்கான வாகனங்கள் உள்ளன. டிராக்டர், நான்கு சக்கரம், இருசக்கர வாகனங்களில் போக்குவரத்து விதிமுறைபடி, வாகன பதிவு எண்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் சிலர், தங்கள் வாகனங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி, பல்வேறு வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் பதிவு எண்களை எழுதியுள்ளனர். மேலும் சிலர், பதிவு எண் இல்லாமல் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதுபோன்ற வாகனங்களால் ஏற்படும் விபத்தின் போது, பாதிக்கப்பட்டவர்கள்,புகார் தெரிவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இருசக்கர வாகன நம்பர் பிளேட்டுகளில், எண்கள் எழுதும் முறை, அளவு குறித்து அரசு அறிவித்துள்ளது. மேலும், நம்பர் பிளேட்டுகளில் வாகன எண்களை மட்டும் எழுத வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது. ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில், போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு, பதிவு எண்களை எழுதாமல் உள்ளனர். இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போலீசார் அலட்சியமாக உள்ளனர். இதனால், மாவட்டம் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறி எழுதப்பட்ட எண்கள் மற்றும் பதிவு எண்கள் இல்லாத வாகனங்கள் வலம் வ ருவது அதிகரித்துள்ளது. எனவே, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பெயரளவுக்கு சோதனை செய்யாமல், இவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.