உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தீப்பெட்டி தொழில் நகரங்களை இணைக்க சர்க்குலர் பஸ்கழுகுமலை, சிவகாசி, கோவில்பட்டி வழியாக இயக்க கோரிக்கை

தீப்பெட்டி தொழில் நகரங்களை இணைக்க சர்க்குலர் பஸ்கழுகுமலை, சிவகாசி, கோவில்பட்டி வழியாக இயக்க கோரிக்கை

கழுகுமலை: கழுகுமலை சுற்றுலாத்தலத்திற்கு சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி வழியாக இரவு நேர சுற்றுப்பேருந்துகள் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் உலகளவில் பிரசித்தி பெற்றது கழுகுமலை சுற்றுலாத்தலமாகும். ஏனெனில் இங்குள்ள சமணர் கால கற்சிற்பங்கள், ஒரே கல்லில் பிரம்மாண்டமாக செதுக்கப்பட்ட ஒற்றைக்கல் சிற்பரதக் கோயில் எனப்படும் வெட்டுவான் கோயில் போன்ற கலையம்சங்கள் வெளிநாட்டினரை மிகவும் கவர்ந்த அம்சங்களாகும்.இதனால் கழுகுமலை தென்னகத்தின் எல்லோரா எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் கழுகுமலை சுற்றுலாத்தலத்தின் ஆதாரமாக விளங்கும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள கழுகாசலமூர்த்தி குடவரைக்கோயில், மலைக்குன்றின் மேலு ள்ள பிரமாண்ட அய்யனார் கோயில், குகை லிங்க கோயில் போன்றவை அமைந்துள்ளதால் தமிழகத்தின் தென்பழனி என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர்.மேலும் திருச்சி மலைக்கோட்டையில் அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் போலவே கழுகுமலை மலைக்குன்றின் உச்சியிலும் பிள்ளையார் கோ யில் அமைந்துள்ளதால் கழுகுமலைக்கு வருவோர் திருச்சி மலைக்கோட்டைக்கு சென்று வந்த அனுபவத்தை உணருவதாக கூறுகின்றனர். இது தவிர கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கருவறையை சுற்றி கும்பிட வேண்டுமெனில் அல்லது கிரிவலம் சுற்றி வர வேண்டுமெனில் மலைக்குன்றையே சுற்றி வரவேண்டும் என்பதால் இங்கு நடக்கும் பௌர்ணமி கிரிவலத்தை திருவண்ணாமலை கிரிவலத்துடன் பக்தர்கள் ஒப்பிடுகின்றனர். இவ்வளவு சிறப்புகள் கொண்ட கழுகுமலை சுற்றுலாநகரம் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக, முன்பு எவ்வாறு இருந்ததோ அதே போல் தான் உள்ளது. அதிலும் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டு பல லட்சங்கள் செலவழித்தும் பெரியளவில் மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை என்பது இங்குள்ள மக்களின் ஆதங்கமாகும்.கழுகுமலையில் பிரதான தொழிலாக தீப்பெட்டி தொழில் இருந்து வந்தது. தற்போது கழுகுமலையில் நலிந்து போன தீப்பெட்டி தொழிலை நம்பி வாழ்ந்த பொதுமக்கள் பிழைப்பு தேடி வெளியூர் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. வியாபாரிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், தினக்கூகூலித் தொழிலாளர்களுக்கு கழுகுமலை வழியாக நடக்கும் போக்குவரத்து அடிப்படை ஆதாரமாக உள்ளது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவில்பட்டியில் இருந்து கழுகுமலைக்கு இரவு 11 மணிவரை பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 10.20 மணியை கடந்தால் கழுகுமலை மக்களின் கதி அதோகதி தான். கோவில்பட்டி பஸ் ஸ்டாண்டில் அதிகாலை 3 மணி வரை கொசுத் தொல்லை மற்றும் இரவு நேர ரோந்து போலீசாரின் கண்டிப்பு இவற்றை தாங்கிக் கொண்டு காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. கழுகுமலை சுற்றுலா நகர பொதுமக்களின் அவலநிலை ஒருபுறமிருந்தாலும், கோவில்பட்டி அண்ணா பஸ் ஸ்டாண்டிலிருந்து திருநெல்வேலி, சிவகாசி போன்ற நகரங்களுக்கும் இதே கதிதான் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் கழுகுமலை, சிவகாசி, சாத்தூர் போன்ற நகரங்கள் தீப்பெட்டி தொழில் வழியாக ரத்த சொந்தங்களை போன்ற தொடர்புடையவை. ஏனெனில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளில் சுமார் 75 சதவீதம் கோவில்பட்டி, கழுகுமலை, சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட நகரங்களிலும், அதை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களிலுமே உற்பத்தியாகின்றது.இது தவிர மேலும் பல தொழில்கள் இந்நகரங்களுக்கிடையே நடப்பதால் இரவு நேர போக்குவரத்து மிகவும் அவசியமாகிறது. ஆகவே தினமும் சுமார் இரவு 8.00 மணிக்கு மேல் கழுகுமலை, சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி வழியாக கழுகுமலைக்கு வட்டப் பேருந்து இயக்கினால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர். இதே அரசு பஸ் மீண்டும் அதே வட்டப்பாதையில் இயங்கவும், இதன் நேர் எதிர் வழியில் மற்றொரு அரசு பஸ் இயக்கவும் வேண்டுமென வியாபாரிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.இவ்வாறு போக்குவரத்து பெருகினால், தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடைவதுடன் கழுகுமலை சுற்றுலாத்தலமும் மேம்பாடு அடையும் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். எனவே கழுகுமலை சுற்றுலாத்தலத்தை சிவகாசி, கோவில்பட்டி ஆகிய நகரங்களுடன் இணைத்து இரவு நேர வட்டப்பேருந்து இயக்க வேண்டுமென பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை