திருப்பூர்:வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால், வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவின் பக்கம் திரும்ப வாய்ப்புள்ளது; ஆயத்த ஆடை ஏற்றுமதி ஆர்டர்களும் வரும் வாய்ப்பு உள்ளதாக தொழில் துறையினர் கருதுகின்றனர்.வங்கதேசத்தில் துவங்கிய மாணவர் போராட்டம், வன்முறையாக மாறி, கடுமையான உள்நாட்டு குழப்பம் நீடிக்கிறது. ராணுவத்தின் உதவியுடன் இடைக்கால அரசு அமைக்கும் நடவடிக்கைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.வங்கதேசம் சிறிய நாடாக இருந்தாலும், சர்வதேச அளவிலான ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை வர்த்தகத்தில், சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. வளர்ந்த நாடுகளுக்கு அதிக ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது நாடாகவும் இருக்கிறது. வரியில்லா ஒப்பந்தம்
இந்தியா - வங்கதேசம் இடையே, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. இதனால், இந்தியாவில் இருந்து மூலப்பொருட்களை வரியில்லாமல் இறக்குமதி செய்யும் வங்கதேசம், ஆயத்த ஆடைகளை குறைந்த விலைக்கு இந்தியாவுக்குள் இறக்குமதி செய்து வருகிறது.கடந்த, ஆறு ஆண்டுகளுக்கு முன், 200 கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்த ஏற்றுமதி வர்த்தகம், இன்று, 5 ஆயிரம் கோடி ரூபாயை நெருங்கி கொண்டிருக்கிறது. வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ரீதியான இறக்குமதியால், நம் நாட்டின் உள்நாட்டு சந்தைகள், வங்கதேச ஆடைகளால் ஆக்கிரமிக்கப்படுகின்றன. வங்கதேச வளர்ச்சி
கடந்த, 1972ல், வங்கதேசத்தின் உள்நாட்டு உற்பத்தி, 52 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, 42 லட்சம் கோடி ரூபாயயை நெருங்கி வருகிறது. ஆயத்த ஆடை ஏற்றுமதியால் தான், இத்தகைய வளர்ச்சியை வங்கதேசம் அடைய முடிந்தது.கடந்த, 1980க்கு பின், வங்கதேசம் ஆயத்த ஆடை வர்த்தகத்தில் துடிப்பான நாடாக மாறத்துவங்கியது. 2005க்கு பின், ஆடை ஏற்றுமதிக்கான உலகளாவிய ஒதுக்கீட்டு முறை நீக்கப்பட்டது. இதனை வங்கதேசம் மிகச்சரியாக பயன்படுத்தி கொண்டது.வங்கதேசத்தின் ஆடை ஏற்றுமதி வர்த்தக பங்களிப்பு, 2014ல், 2.10 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது; 2023ல், 3.20 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. சீனாவின் ஏற்றுமதி திறன், 13.44 லட்சம் கோடி ரூபாயாக இருந்தாலும், வங்கதேசத்தின் விரைவான வளர்ச்சி, சர்வதேச சந்தைகளை விரைந்து கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. சீனாவை பொறுத்தவரை, உலக அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது.இந்தியாவின் புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது, ஏற்றுமதி வர்த்தகம் குறைந்துள்ளது. கடந்த, 10 ஆண்டுகள் ஏற்றுமதி விவரத்தை, டாலர் மதிப்பு அடிப்படையில் கணக்கிட்டால் இது தெரியவரும். சமீபத்திய, உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுாலிழை ஆடை
செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் பின்தங்கியள்ளதால், உலக சந்தை வாய்ப்புகளை கவர்வதிலும் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. உலக மக்கள் தேவையை பூர்த்தி செய்ய, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு மாறியிருக்க வேண்டும்.வங்கதேசத்தை பொறுத்தவரை, சேதம் அதிகம் என்றாலும், அந்நாட்டில் உயிர்நாடியே ஆயத்த ஆடை ஏற்றுமதி தான். அதற்காகவே, பல்வேறு சலுகைகளை அந்நாட்டு அரசு வாரி இறைக்கிறது. எனவே, இடைக்கால அரசும், உடனடியாக இயல்புநிலை திரும்ப முயற்சி எடுக்கும்.அவ்வளவு எளிதாக, வர்த்தக வாய்ப்புகளை இழக்க மாட்டார்கள். இருப்பினும், செயற்கை நுாலிழை ஆடை மற்றும் பசுமை சார் உற்பத்தி திறமைகளை எடுத்துரைத்து, புதிய ஆர்டர்களை ஈர்க்க இந்திய தொழில்துறையினர் முயற்சிக்கலாம். அதற்கான பலனும் கைமேல் கிடைக்க வாய்ப்புள்ளது.அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளும், நம் நாட்டை காட்டிலும் வங்கதேசத்துடன் வர்த்தகம் செய்கின்றன. தற்போது, அந்நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு குழப்பத்தால், வர்த்தக வாய்ப்புகள், இந்தியாவின் பக்கமாக திரும்புமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது