பல்லடம்;பல்லடத்தில், 'கல்' நெஞ்சம் படைத்தவர்கள் ஆசிட் ஊற்றியதால் பசுமையான வேப்ப மரம் ஒன்று கருகியது. மற்றொரு மரம் கருகும் நிலையிலும் உள்ளது.தமிழகம் முழுவதும், கோடை வெயில் 100 டிகிரியை கடந்து தகித்து வருகிறது. தொழில், வியாபாரம், வேலை காரணமாக வெளியே வரும் பொதுமக்கள், தாகத்தை தணிக்க நீர்மோர் பந்தலையும், வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க நிழலையும் தேடி ஓடுகின்றனர்.ஆனால், இது ஒரு புறம் இருக்க, 'கல்' நெஞ்சம் கொண்ட சிலர், மரங்களை வெட்டி வீழ்த்துவதையும், தீ வைத்தும், ஆசிட் ஊற்றி அளிப்பதையுமே பணியாக கொண்டுள்ளனர். பல்லடம் வட்டாரத்தில், மரங்கள் வெட்டி அழிக்கும் சம்பவங்கள் பல்வேறு காலகட்டங்களில் நடந்துள்ளன.கடந்த சில மாதங்களில் மட்டும், நுாற்றுக்கணக்கான மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளது குறித்து, சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக புகார் அளித்துள்ளனர். இருப்பினும், மரங்களை வெட்டுவது தொடர்கதையாக உள்ளது. இவ்வாறு, பல்லடம் ஒன்றியம், வடுகபாளையம் -- கொசவம்பாளையம் ரோட்டில் உள்ள நிழல் தரும் வேப்ப மரங்களுக்கு யாரோ சிலர் ஆசிட் ஊற்றியுள்ளனர்.அப்பகுதியினர் கூறுகையில், 'ரோட்டோரத்தில், அரசு இடத்தில் உள்ள வேப்ப மரங்களால் யாருக்கும் இடையூறு இல்லை. ஆனால், இரவோடு இரவாக யாரோ சிலர், இங்குள்ள வேப்ப மரங்களுக்கு ஆசிட் ஊற்றி சென்றுள்ளனர். அடர்த்தியாக உள்ள பசுமையான வேப்ப மரம் ஒன்று ஆசிட் ஊற்றியதால் முழுமையாக கருகி விட்டது. மற்றொரு மரம் கருகி வருகிறது. விஷமிகளின் செயல் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.